ஐ.ஆர்.சி.டி.சி வெப்சைட்டில் இப்படியொரு குறை; பெரிய உதவி செஞ்ச சென்னை மாணவர்!
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக இந்தியன் ரயில்வே செயல்பட்டு வருகிறது. நாள்தோறும் பல லட்சம் பேர் ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர். ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) இணையதளம் இயங்கி வருகிறது. இதில் உணவு, சுற்றுலா உள்ளிட்ட
பல்வேறு வசதிகளும் கிடைக்கின்றன. இந்த இணையதளம் அவ்வப்போது புதிதாக அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் இருந்த குறைபாட்டை சென்னையை சேர்ந்த 17 வயது மாணவன் கண்டறிந்துள்ளார்.
டிக்கெட் முன்பதிவு
சென்னை தாம்பரத்தை சேர்ந்தவர் பா.ரங்கநாதன். இவர் சேலையூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு வணிகவியல் பிரிவில் படித்து வருகிறார். இந்த சூழலில் உறவினர் ஒருவரின் ரயில் பயணத்துக்காக கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார். அப்போது வலைதளம் இயங்கும் கோடிங் குறித்து தற்செயலாக ஆராய்ந்தார். அதில், சில குறைபாடுகள் இருந்ததை கண்டுபிடித்துள்ளார்.
கோடிங்கில் சில குறைபாடுகள்
அதாவது முன்பதிவு
செய்தவர்களின் பரிவர்த்தனை ஐடியை கோடிங் மூலம் எடுக்க நேர்ந்தது. இதைக் கொண்டு முன்பதிவு செய்த நபர்களுக்கு தெரியாமலேயே உணவு ஆர்டர் செய்ய முடியும். புறப்படும் இடத்தை மாற்றி அமைக்கலாம். டிக்கெட்டை ரத்து செய்யலாம். மேலும் லட்சக்கணக்கான பயணிகளின் தரவுகளை தவறான வகையில் பயன்படுத்த வாய்ப்புள்ளது. உடனே CERT-IN எனப்படும் இந்தியக் கணினி அவசர நடவடிக்கை குழுவிற்கு இ-மெயில் அனுப்பியுள்ளார்.
சென்னை மாணவருக்கு பாராட்டு
அடுத்த இரண்டு மணி நேரத்தில் இ-மெயில் மூலமாக மாணவர் பா.ரங்கநாதனை அவசர நடவடிக்கை குழுவினர் தொடர்பு கொண்டனர். அப்போது குறைபாட்டை விரைவாக சரிசெய்து விடுவோம் என்று உறுதியளித்தனர். பின்னர் தங்கள் குழுவினரோடு ஆலோசனை மேற்கொண்டு கோடிங்கில் பல்வேறு மாற்றங்கள் செய்துள்ளனர். இந்த சூழலில் கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் இருந்த குறைபாடு நீக்கப்பட்டது.
இந்த செய்தி தற்போது
பல்வேறு ஊடகங்களில் வெளியாகியுள்ளது. இதையடுத்து மாணவர் பா.ரங்கநாதனுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். கோடிங்கில் அதிக ஆர்வம் கொண்ட பா.ரங்கநாதன் ஏற்கனவே ஐ.நா சபை, லிங்கிடின், லினோவா உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களின் இணையதளங்களில் இருந்த குறைபாட்டை கண்டறிந்து தெரிவித்துள்ளார். இதற்காக அவருக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment