ஹசன் அலி: இந்திய மனைவி, ஷியா மதப் பிரிவை காரணம் காட்டி இணையத்தில் கடும் தாக்குதல் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, November 12, 2021

ஹசன் அலி: இந்திய மனைவி, ஷியா மதப் பிரிவை காரணம் காட்டி இணையத்தில் கடும் தாக்குதல்

ஹசன் அலி: இந்திய மனைவி, ஷியா மதப் பிரிவை காரணம் காட்டி இணையத்தில் கடும் தாக்குதல்

டி20 உலகக்
கோப்பையின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி நேற்று ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்து முடிந்தது. ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி, சிறப்பாக விளையாடியும், ஆஸ்திரேலியாவிடம் தோல்வியுற்றது.

ஆட்டத்தின் 15ஆவது ஓவர் வரை ஆதிக்கம் செலுத்தி வந்த பாகிஸ்தான் பிடி, 16ஆவது ஓவர் முதல் தளரத் தொடங்கியது. 19ஆவது ஓவரை அதிரடி பந்துவீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி வீசினார். மேத்திவ் வேட் அடித்த ஷாஹீனின் மூன்றாவது பந்து, ஹசன் அலியை நோக்கிச் சென்றது, அக்கேட்சை அவர் தவறவிட்டார்.

அது ஒட்டுமொத்த ஆட்டத்தையும் கடுமையாக பாதித்தது. மயிரிழையில் மேத்திவ் வேடின் விக்கெட் தப்பியது. ஷாஹீன் வீசிய அடுத்த மூன்று பந்துகளை தொடர்ந்து சிக்ஸருக்கு அனுப்பி பாகிஸ்தானை வென்றது ஆஸ்திரேலியா.

இந்த கேட்ச் போக, நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களிலேயே அதிக ரன்களைக் கொடுத்த பந்துவீச்சாளரும் இவர் தான். 4 ஓவர்களுக்கு 44 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இதுவும் ஒரு காரணமாக குறிப்பிட்டு விமர்சனங்கள் எழுந்தன.
 
கேட்சை தவறவிட்டது குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசமும்

"அக்கேட்சைப் பிடித்திருந்தால் ஆட்டம் வேறு மாதிரி மாறி இருந்திருக்கலாம். இதுவும் ஆட்டத்தில் ஒரு பகுதிதான்" என கூறினார்.

மேலும் "ஹசன் அலி என் முக்கிய பந்துவீச்சாளர்களில் ஒருவர். அவர் பல போட்டிகளில் பாகிஸ்தானை வெற்றி பெறச் செய்துள்ளார். நான் அவரை நிச்சயம் ஆதரிப்பேன். எல்லா தனிநபர்களும் சில நாட்களில் சிறப்பாக செயல்படுவர், சில நாட்கள் அவர்களுக்கானதாக இருக்காது" என போட்டிக்குப் பிறகான பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஹசன் அலிக்கு தன் ஆதரவைத் தெரிவித்தார்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, ஹசன் அலியின் மனைவி இந்தியாவைச் சேர்ந்தவர் என விவாதம் திசை திரும்பியது. அவர் மனைவி இந்தியாவைச் சேர்ந்தவர் என்பதைத் தாண்டி, அவரது மனைவி இந்திய உளவு அமைப்பான 'ரா'வை சேர்ந்தவர் என்று குற்றம் சாட்டும் பதிவுகளையும் சமூக வலைதளங்களில் காண முடிந்தது.

இதெல்லாம் போக ஹசன் அலியை, சமூக வலைதளங்களில் மிக மோசமான வார்த்தைகளில் வசைபாடியைதையும் பார்க்க முடிகிறது.

ஹசன் அலியின் மனைவியை வைத்து விமர்சித்ததோடு, ஹசன் அலி ஒரு ஷியா இஸ்லாமியர், அதனால் தான் விமர்சிக்கப்படுகிறார் எனவும் கூறப்பட்டது. அதோடு ஹசன் அலி குறித்த கடும் விமர்சனங்களைக் கொண்ட ஸ்கிரீன் ஷாட் படங்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். மேலும் ஹசன் அலியை ஆதரிப்பவர்கள், இது தான் விளையாட்டு மாண்பா? விளையாட்டு மாண்பு எங்கே? எனவும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினர்.

அவருக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஆதரவளிக்கும் விதத்தில் #IstandwithHasanAli, #INDwithHasanAli, என்கிற ஹேஷ்டேக்குகள் டிரெண்ட் ஆகின்றன.

இதே டி20 உலகக் கோப்பை தொடரில், இந்தியா பாகிஸ்தானுக்கு இடையிலான போட்டியில் மொஹம்மத் ஷமி அதிக ரன்களை விட்டுக் கொடுத்ததற்காகவும், அவரது மதம் தொடர்பாகவும் விமர்சிக்கப்பட்டார் என்பது நினைவுகூரத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad