கற்க கசடற... காஞ்சியில் கல்வி புரட்சி - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, April 24, 2021

கற்க கசடற... காஞ்சியில் கல்வி புரட்சி

கற்க கசடற... காஞ்சியில் கல்வி புரட்சி



கற்றல் ஒரு கலை என்றால், கற்பித்தல் அதற்கும் ஒரு படி மேல் எனலாம். நாம் அறிந்ததை பிறருக்கு கற்பித்தல் ஒரு வகை என்றால், பிறர் தேவை அறிந்து அதை நாம் கற்று, பலருக்கும் கற்பித்தல் மற்றொரு வகை.

இதில் இரண்டாம் வகையைச் சேர்ந்தவர்கள் தான், 'காஞ்சி டிஜிட்டல் டீம்' ஆசிரியர் குழுவினர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வெவ்வேறு அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் இணைந்து, 2018ம் ஆண்டு இந்த குழுவை துவக்கினர். கற்றல் எவ்வளவு முக்கியமோ அதே அளவு கற்பித்தலும் முக்கியம் என்பதை உணர்ந்த இந்த ஆசிரியர்கள், டிஜிட்டல் தொழில்நுட்ப உலகிற்கு ஏற்ப, பல புதிய தொழில்நுட்பங்கள் கற்றறிந்து, அவற்றை மாணவர்களுக்கும் போதிக்கின்றனர்.

வாழ்நாள் முழுதும் புதிய புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வம் கொண்டிருக்கும் சிறந்த மாணவனே, நல்ல ஆசிரியன் ஆக முடியும் என்பது இந்த குழுவினரின் நம்பிக்கை. அதற்காக, பல பொறியியல் நிறுவனங்கள், பயிற்சி மையங்கள், பல்கலைகள் என தேடி தேடி சென்று, புதிய தொழில்நுட்பங்களை கற்கின்றனர். தாங்கள் கற்றதை, தங்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமின்றி, அனைத்து தரப்பு மாணவர்களும் கற்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில், அவற்றை வலைதளத்திலும் பதிவிடுகின்றனர்.தனியார் பள்ளிகளுக்கு தாங்கள் எந்த வகையிலும் குறைந்தவர்கள் இல்லை எனக்கூறும் ஆசிரியர்கள், தங்களின் வகுப்பறைகளை முழுக்க முழுக்க கணினி மயமாக்கியுள்ளனர்.

இது குறித்து, காஞ்சி டிஜிட்டல் டீம் குழுவினர் கூறியதாவது:நாங்கள் வெளியில் சென்றும், 'ஆன்லைன்' வாயிலாகவும் படித்து பெறும் பயிற்சிகளை வைத்து, 'வெப்' பக்கங்களை உருவாக்குதல், விக்கிபீடியாவில் கட்டுரை எழுதுவது, 'வீடியோ' மேக்கிங், சைபர் செக்யூரிட்டி, ரோபோட்டிக், கோடிங் போன்ற வகுப்புகளை, மாணவர்களுக்கு நடத்துகிறோம். கொரோனா வைரஸ் காரணமாக, தற்போது பயிற்சி வகுப்புகள் ஆன்லைனில் நடக்கின்றன.நாங்கள் கற்றதை, 'வீடியோ'வாக பதிவிட்டு, 'காஞ்சி டிஜிட்டல் டீம்' வலைதளத்தில் வெளியிடுகிறோம்.

இந்த வீடியோக்களை பார்த்து, 200க்கும் மேற்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்கள் பயன் பெறுகின்றனர். தவிர, கற்கும் மாணவர்களே, மற்ற மாணவர்களுக்கு வகுப்பும் எடுக்கின்றனர். பயிற்சி மற்றும் இதர செலவுகளை, ஆசிரியர்கள் தங்கள் சொந்த செலவில் செய்து வருகின்றனர். கணினி போன்ற பெரிய செலவுகளுக்கு, 'ரோட்டரி கிளப்' போன்ற அமைப்புகள் உதவுகின்றன.ஆசிரியர்களின் செயல்பாடுகளுக்கு, பள்ளிக்கல்வித் துறை முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

'கற்போம், கற்பிப்போம்' என்ற முனைப்போடு துவங்கப்பட்டது தான் இந்த காஞ்சி டிஜிட்டல் டீம் குழு. இன்றைய நிலையில், பெரிய அளவில் இக்குழு செயல்பட்டு வருகிறது. ஆசிரியர்களுடைய அர்ப்பணிப்பு, பல்வேறு விஷயங்களை மாணவர்களிடையே கொண்டு சேர்க்கிறது. அடுத்தகட்டமாக கோடை காலப் பயிற்சி, '3டி பிரின்டர்' ஆகியவை குறித்து வகுப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
என்.அன்பழகன்,
ஆசிரியர்,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, உத்திரமேரூர்


கண்டுபிடிப்புகள் வரவேற்பு


ஒவ்வொரு ஆண்டும் 'மாணவ விஞ்ஞானி தேடல்' என்ற நிகழ்ச்சியும், 'மாணவர்களைக் கொண்டாடும் திருவிழா' என்ற நிகழ்ச்சியும் நடத்தப்படுகின்றன. விஞ்ஞானி தேடல் நிகழ்ச்சியில், மாணவர்களிடம் இருந்து, அறிவியல் கண்டுபிடிப்பு வரவேற்கப்படுகின்றன. இதில், சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு, 13 வகையான பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மாணவர்களை கொண்டாடும் திருவிழா நிகழ்ச்சியில், பேச்சு, கட்டுரை, ஓவியம், கவிதை என, பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு என, இரு மாவட்டங்களில், 13 ஊராட்சி ஒன்றியங்கள் இருந்து, மாணவ - மாணவியர், இப்போட்டிகளில் பங்கேற்கின்றனர்.



'ஸ்மார்ட்' வகுப்பறை


உதாரணமாக, குருவிமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும், ஆறாம் வகுப்பு மாணவர்கள், 'ரோபோட்டிக், சாப்ட்வேர் கோடிங்' போன்றவற்றை கற்று, மற்ற மாணவர்களுக்கும், 'ஆன்லைனில்' வகுப்பு எடுக்கின்றனர்.ஓணம்பாக்கம், கீழ்கதிர்பூர் ஆகிய ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில், கரும்பலகைக்கு பதில், 'டிஜிட்டல்' பலகையே பயன்படுத்துகின்றனர். பல பள்ளிகளின் வகுப்பறைகள், 'ஸ்மார்ட்' வகுப்பறை களாக மாறியுள்ளன.


FOR LATEST NEWS JOIN TELEGRAM BELOW

  Join Telegram-   CLICK HERE 


  *இந்த பயனுள்ள தகவலை  உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்⏩⏩

No comments:

Post a Comment

Post Top Ad