முதுகு வலி.. தப்பிக்க என்ன வழி? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, April 25, 2021

முதுகு வலி.. தப்பிக்க என்ன வழி?

முதுகு வலி.. தப்பிக்க என்ன வழி?


முதுகு வலி.. தப்பிக்க என்ன வழி?

''இன்றைய வாழ்க்கைச் சூழலில், முதுகு இருக்கும் அனைவருக்குமே முதுகு வலியும் இருக்கிறது!





உடம்பில் உள்ள அனைத்துத் தசைகளின் அழுத்தமும் ஒருசேர முதுகுத் தண்டில் குவிவதால் ஏற்படும் பிரச்னை இது'' என்கிறார் எலும்பு மூட்டு நிபுணர் (ஆர்த்ராஸ்கோப்பிக் அறுவைச் சிகிச்சையாளர்) டாக்டர் ரவி சுப்பிரமணியம்.

''உடல் ரீதியாக முதுகு வலி எப்படி உருவாகிறது?''

''சிறு சிறு கண்ணிகள் போன்ற அமைப்புடன் கூடிய 33 எலும்புகள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கிய நிலையில் வலுவாகப் பிணைத்துவைக்கப்பட்டதுதான் 'முதுகெலும்புத் தொடர்’. இதில், எலும்புகளுக்கு இடையில் உராய்வைத் தடுக்கும் விதமாக டிஸ்க் எனப்படும் ஜெல்லி போன்ற மிருதுவான பாகங்கள் உள்ளன. இரு சக்கர வாகனங்களில் அதிர்வுகளைத் தாங்குவதற்குப் பயன்படும் 'ஷாக் அப்சர்வர்’ போன்ற அமைப்பு இது.

துளையுடனான முதுகெலும்புகளுக்கு நடுவே மிகவும் பாதுகாப்பான நிலையில் இருக்கின்றன தண்டுவட நரம்புகள். உடல் உறுப்புகள் அனைத்தையும் கட்டுப்படுத்தக்கூடிய மூளையின் உத்தரவுகளை கடத்திச் செல்லும் முக்கியப் பணியைச் செய்வது இந்தத் தண்டுவட நரம்புகள்தான். முதுகெலும்புகளுக்கு மத்தியில் உள்ள டிஸ்க் நகர்ந்து இந்த நரம்புகள் நசுக்கப்படும்போது தாங்க முடியாத வலி ஏற்படும். இதைத்தான் முதுகு வலி என்கிறோம்.''

''முதுகு வலி வருவதற்கான காரணங்கள் என்னென்ன?''

''உடற்பயிற்சி இல்லாமல் இருப்பதுதான் பலருக்கும் முதுகு வலி வருவதற்கான முக்கியக் காரணம். வேலை நிமித்தமாக தொடர்ச்சியாக கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்தே இருக்கக்கூடிய சூழல், தினமும் இரு சக்கர வாகனங்களில் நெடுந்தொலைவு பயணித்தல், உடல் எடை கூடுதல், கூன் விழுந்த நிலையில் உட்கார்ந்திருத்தல் போன்ற செய்கைகளால், உடல் தசைகள் பலவீனம் அடைவதோடு, முதுகெலும்புகளில் உள்ள 'டிஸ்க்’ அமைப்புகளிலும் அதீத அழுத்தமும் தேய்மானமும் ஏற்படுகிறது. இதனால், ஒட்டுமொத்த முதுகெலும்பு அமைப்பும் சீர்குலைவதோடு, தண்டுவட நரம்புகளும் அழுத்தப்பட்டு வலி ஏற்படுகிறது. தவிர, எலும்புகளில் ஏற்படும் சத்துக் குறைவுப் பாதிப்புகளாலும் முதுகு வலி வரும்.''

''எலும்புகளில் என்னென்ன பிரச்னைகள் தோன்றும்?''


 
''எலும்பின் உறுதித்தன்மைக்கும் ஆரோக்கியத்துக்கும் கால்சியத்தின் பங்கு முக்கியமானது. 20 வயது இளைஞனின் எலும்பில் கால்சியத்தின் அளவு அதிகமாக இருப்பதால், எலும்புகளும் வலுவாக இருக்கும். ஆனால், வயது கூடும்போது இந்த கால்சியத்தின் அளவும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து எலும்பு மெலிந்து, மிருதுத்தன்மையை அடைந்துவிடும். இதை 'எலும்பு மெலிதல்’ (Osteoporosis) என்கிறோம். நகரச் சூழலில் இருப்பவர்கள் பெரும்பாலும் வீட்டிற்குள்ளேயே அடைந்துகிடப்பதால், உடலில் வெயில் படுவதே அபூர்வமாகிவிட்டது. வெயிலில் கிடைக்கும் 'வைட்டமின் டி’ எலும்புகளுக்குக் கிடைக்காமல் போவதாலும் எலும்புகள் மிருதுத்தன்மை அடைந்து எளிதில் தேய்மானமாகும் வாய்ப்பு உள்ளது. எனவே, தினமும் அரை மணி நேரமாவது உடலில் வெயில் படும்படியாகச் சூழ்நிலைகளை மாற்றிக்கொள்வது நல்லது!''


 
''முதுகு வலித் தொல்லையில் இருந்து விடுபட, கால்சியம் நிறைந்த உணவுகளைச் சாப்பிட்டால் போதுமா?''

''அப்படி இல்லை. 'பாலில் கால்சியம் சத்து உண்டு. எலும்பின் ஆரோக்கியத்துக்கு இது நல்லது’ என்று நினைத்து நிறைய பேர் பால் குடிக்கிறார்கள். ஆனால், பாலில் உள்ள கால்சியத்தைப் பிரித்தெடுக்கும் ரெனின் என்சைம் (Rennin Enzyme) குழந்தைகளின் (குறிப்பிட்ட வயது வரை) உடலில் மட்டுமே சுரக்கிறது. பெரியவர்களுக்கு இந்த வகை என்சைம்கள் இயற்கையாகவே உடலில் சுரப்பது இல்லை. எனவே, எவ்வளவுதான் பால் குடித்தாலும் அதில் இருக்கும் கால்சியம் எலும்புகளுக்கு கிடைக்காது. அடுத்ததாக, கார்பனேட்டட் ட்ரிங்க்ஸ், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளில் பாஸ்ஃபோரிக் அமிலம் (Phosphoric Acid)சேர்ப்பார்கள். இது உடலில் கால்சியம் சத்து உறிஞ்சப்படுவதைத் தடை செய்யும். எனவே, இதுபோன்ற உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். சாதாரணமாக நாம் சாப்பிடும் உணவு வகைகளிலேயே நமது எலும்புகளுக்குத் தேவையான கால்சியம் சத்து இருக்கிறது. கால்சியத்தை எலும்பு கிரகிக்கவும், முதுகு வலிக்கு முடிவு கட்டவும் ஒரே வழி உடற்பயிற்சிதான். உடற்பயிற்சி செய்யும்போதுதான், எலும்புகள் தங்களுக்குத் தேவையான கால்சியத்தை உறிஞ்சும்!''

''எலும்பின் ஆரோக்கியம் காக்க எந்த வகை உடற்பயிற்சிகள் செய்யலாம்?''

''நீச்சல், ஓட்டம், சைக்கிளிங் போன்ற எலும்பு மூட்டுகளுக்குப் பயிற்சி அளிக்கக்கூடிய ஏரோபிக்ஸ் (Aerobics Exercise) வகை உடற்பயிற்சிகள் நல்லது. இவை தவிர, உடலின் வளைவுத்தன்மைக்கு உதவும் யோகாவும் எலும்பின் ஆரோக்கியத்தைக் காக்க வல்லது!''



FOR LATEST NEWS JOIN TELEGRAM BELOW

  Join Telegram-   CLICK HERE 


  *இந்த பயனுள்ள தகவலை  உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்⏩⏩ 

No comments:

Post a Comment

Post Top Ad