தண்ணீர் பிரச்னைக்கு சுமூக தீர்வு - மாநில அரசுகள் ஒப்புதல் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, June 19, 2021

தண்ணீர் பிரச்னைக்கு சுமூக தீர்வு - மாநில அரசுகள் ஒப்புதல்

தண்ணீர் பிரச்னைக்கு சுமூக தீர்வு - மாநில அரசுகள் ஒப்புதல்


தண்ணீர் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண, மஹாராஷ்டிரா - கர்நாடகா மாநில அரசுகள் ஒப்புதல் தெரிவித்துள்ளன.

கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கிடையே தண்ணீர் பகிர்வு தொடர்பாக பிரச்னை நீடித்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில், உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா, உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை மற்றும் மஹாராஷ்டிர மாநில நீர்வளத் துறை அமைச்சர் ஜெயந்த் பாட்டீல் ஆகியோர் கலந்து கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையில், இரு மாநிலங்களிலும் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெள்ள மேலாண்மை மற்றும் தண்ணீர் வழங்குவது தொடர்பாக, சிறந்த ஒருங்கிணைப்பு மற்றும் தகவல்களை பகிர்ந்து கொள்வது என, முடிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக, கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வெள்ளத்தை திறம்பட நிர்வகிப்பதற்காக கிருஷ்ணா மற்றும் பீமா நதிப் படுகையில் உள்ள அணைப் பகுதிகளில் பெய்த மழை மற்றும் தண்ணீர் வெளியேற்றம் குறித்த நிகழ் நேர தரவுகளை பகிர்ந்து கொள்ள இரு மாநிலங்களும் ஒப்புக் கொண்டுள்ளன.

இன்றையக் கூட்டத்தில், கிருஷ்ணா மற்றும் பீமா நதிப் படுகைகளில் வெள்ள மேலாண்மை தொடர்பான பல பிரச்னைகள் குறித்து விவாதித்தோம். அமைச்சர் மட்டத்திலும், செயலாளர்கள் மட்டத்திலும், கள மட்டத்திலும் இரு மாநிலங்களுக்கிடையில் சிறந்த ஒருங்கிணைப்பு மற்றும் தகவல்களை பகிர்ந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது.


மஹாராஷ்டிர மாநிலத்திலிருந்து 4 டி.எம்.சி., தண்ணீரைப் பெறுவதற்கும், அதற்கு பதிலாக அந்த மாநிலத்தின் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தண்ணீரை விடுவிப்பதற்கும் ஒரு தொழில்நுட்பக் குழு செயல்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

இது தவிர, துத்கங்கா அணை திட்டத்தை விரைவில் முடிக்க இரு மாநிலங்களும் ஒப்புக் கொண்டுள்ளன. இதற்கு மஹாராஷ்டிர மாநில அரசும் நிதி வழங்கும் என, அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் ஜெயந்த் பாட்டீல் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad