தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு நாளை டெல்லி பயணம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, July 29, 2021

தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு நாளை டெல்லி பயணம்!

தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு நாளை டெல்லி பயணம்!

தமிழ்நாட்டின் முதல்வராக ஐந்து முறை பொறுப்பு வகித்துள்ளவர் கலைஞர் கருணாநிதி. திமுக தலைவராக நீண்ட நாட்கள் இருந்த அவர், கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி சென்னையில் காலமானார்.

அவரது மறைவுக்கு பின்னர் திமுக தலைவராக பொறுப்பேற்ற ஸ்டாலின் தலைமையில் முதல் சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்த அக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் திருவுருவப்பட திறப்பு விழா ஆகஸ்ட் 2ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து சபாநாயகர் அப்பாவு கூறுகையில், “சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 2ஆம் தேதி முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி உருவப்படத்தை மாலை 5 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்கிறார். படத்திறப்பு விழாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்குகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவிலும் குடியரசு தலைவர் பங்கேற்கிறார். நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கட்சி பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும். விழாவுக்கான ஏற்பாடு சட்டப் பேரவைச் செயலகத்தினால் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று தெரிவித்திருந்தார்.



அதன் தொடர்ச்சியாக, தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு நாளை டெல்லி சென்று குடியரசுத் தலைவரை சந்திக்கவுள்ளார். கலைஞர் கருணாநிதியின் திருவுருவப்பட திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு வழங்குவதற்காக சபாநாயகர் அப்பாவு டெல்லி பயணம் மேற்கொள்கிறார்.

முன்னதாக, சமீபத்தில் டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின், சட்டப்பேரவை நூற்றாண்டு விழா, சட்டமன்றத்தில் முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவப் படத்தை திறந்துவைக்கவும், மதுரையில் கலைஞர் பெயரில் அமையவிருக்கும் நூலகம், சென்னை கிண்டியில் அமையவிருக்கும் அரசு மருத்துவமனை, இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளை எட்டியதை நினைவுகூரும் வகையில் கடற்கரைச் சாலையில் அமையவிருக்கும் நினைவுத்தூண் ஆகியவற்றின் அடிக்கல் நாட்டு நிகழ்வுகளிலும் பங்கேற்க குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad