வேலுமணியை தவிர அத்தனை பேருக்கும் ஸ்கெட்ச்: பலிக்குமா ஸ்டாலினின் கொங்கு கனவு? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 13, 2021

வேலுமணியை தவிர அத்தனை பேருக்கும் ஸ்கெட்ச்: பலிக்குமா ஸ்டாலினின் கொங்கு கனவு?

வேலுமணியை தவிர அத்தனை பேருக்கும் ஸ்கெட்ச்: பலிக்குமா ஸ்டாலினின் கொங்கு கனவு?

உள்ளாட்சித் தேர்தலுக்குள் கொங்கு மண்டலத்தில் கட்சியை பலமாக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் பயணித்து வருகிறது திமுக.
இதன் முதல் கட்டமாக கொங்கு மண்டல திமுகவில் முக்கிய பதவிகளை பிடித்துக்கொண்டு எதிர் முகாமோடு திரைமறைவில் கைகுலுக்கி உள்ளடி வேலை பார்த்த கருப்பு ஆடுகளை கண்டறிந்து பதவிகளை பறித்தனர். அத்துடன் புதிய நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர். இது மட்டும் போதாது என உணர்ந்த திமுக தலைமை கொங்கு மண்டலத்தை பலப்படுத்த மாற்றுக் கட்சி ஆள்களை தங்கள் கட்சிக்கு கடத்தி வரும் வேலைகளை முன்னெடுத்துள்ளது.

இந்த பணிக்கு வேறு யாரைவிடவும் செந்தில்பாலாஜி மிகப் பொருத்தமாக இருப்பார் என்பதாலே கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக சேலம் மாவட்டத்துக்கு அனுப்பப்பட்டார். அதிமுக, அமமுக ஆகிய கட்சிகளில் இருந்தவர் என்பதால் அங்குள்ளவர்களிடம் செந்தில் பாலாஜிக்கு நல்ல பழக்கம் உள்ளது. அதைப் பயன்படுத்தி வலை விரித்து முக்கிய புள்ளிகளை அறிவாலயத்துக்கு வளைத்துக் கொண்டு வந்துள்ளார்.

இந்த ஆள்பிடிக்கும் படலம் நடைபெற்றுவருவதாலே அதிமுக முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் மீதான ஊழல் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. ஊழல் தடுப்பு நடவடிக்கையை காட்டியும் இந்த பக்கம் செல்வாக்குள்ள கைகளை இழுக்க முயற்சிப்பதாகவும் கூறுகிறார்கள். ஆனால் ஒருவரது ஊழல் ஃபைல் மட்டும் சத்தமில்லாமல் அடுத்தகட்டத்துக்கு நகர்கிறதாம்.

கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமியின் வலதுகரமாக செயல்பட்டவர் எஸ்.பி.வேலுமணி. கோவையைச் சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ்நாடு முழுக்க பல்வேறு மாவட்டங்களில் தனது அதிகாரத்தை காட்டி பெரிய விளையாட்டுகளை எல்லாம் அரங்கேற்றியுள்ளார் என்கிறார்கள். இப்போது அதிமுகவின் கொறடாவாகவும் இவரே உள்ளார். இவரை மட்டும் விட்டுவிட்டு கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அதிமுக முக்கிய புள்ளிகளுக்கு ஸ்கெட்ச் போடப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

இதனால் மற்றவர்களின் ஃபைல்களை தற்போதைக்கு மூடிவைத்துவிட்டு வேலுமணியின் ஃபைல்களை மட்டும் லஞ்ச ஒழிப்புத்துறை எடுத்து வைத்து உன்னிப்பாக ஆய்வு செய்கிறதாம். வேலுமணி தனது அதிகார வேர்களை இப்போதுகூட எல்லா தரப்பிலும் பரப்பியுள்ளதால் ஆதாரங்களை சரியாக தயார் செய்தபின்னர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறுதியாக உள்ளனராம்.

இவரைத் தவிர பிற மாஜிக்களுக்கும் ஸ்கெட்ச் போடப்பட்டுள்ளது. அந்த வகையில் முன்னாள் சபாநாயகர் தனபாலுடனும் திமுக தரப்பில் பேசிவருவதாக கூறுகிறார்கள். இதில் உள்ள சிக்கல் என்னவென்றால் எம்.எல்.ஏ, எம்.பியாக இல்லாதவர்கள் கையை உதறியபடி அணி மாறிவிடுவார்கள். ஆனால் எம்.எல்.ஏவாக இருப்பவர்கள் கட்சி தாவல் தடை சட்டத்தால் அதிருப்தி எம்.எல்.ஏக்களாக மட்டுமே தொடர முடியும். போகிற இடத்தில் வெயிட்டான பதவியை உடனடியாக பெற முடியாமல் போகும் என கூறப்படுகிறது.

இதையும் கடந்து பலர் எதிர் முகாமுக்கு பறக்க தயாராக இருக்கிறார்களாம். எப்போது எங்கிருந்து யார் செல்வார்கள் என்பது தெரியாது. எடப்பாடி பழனிசாமிக்கு வெற்றிக்காக பாடுபட்டவர்களே அறிவாலயத்தில் ஐக்கியமாகிவிட்டார்கள். அதனாலே அதிமுக சார்பில் யாரும் ஊடகங்களில் பேசக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad