திட்டமிட்டபடி பள்ளிகள் திறப்பு: உறுதி செய்த தமிழக அரசு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, August 30, 2021

திட்டமிட்டபடி பள்ளிகள் திறப்பு: உறுதி செய்த தமிழக அரசு!

திட்டமிட்டபடி பள்ளிகள் திறப்பு: உறுதி செய்த தமிழக அரசு!

செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் 9-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கல்லூரிகளும் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், பள்ளிகள் திட்டமிட்டபடி திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று பரவல் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், தடுப்பூசி போடும் பணிகள், சில மாவட்டங்களில் நோய்த் தொற்று பரவலின் தாக்கம் மற்றும் அண்டைமாநிலங்களில் ஏற்பட்டுவரும் நோய்த்தொற்றின் உயர்வு, நோய்த்தொற்று அதிகரித்தால் அதனை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

அதன் முடிவில், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கொரோனா நோய் பரவல் தடுப்பிற்கான கட்டுப்பாடுகள் வருகிற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அனைத்து கடற்கரைகளிலும் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி முதல் கடற்கரைகளில் பொதுமக்கள் கூடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுதலங்களிலும் பொது மக்கள் வழிபாட்டுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “மருத்துவ வல்லுநர்கள், கல்வியாளர்கள் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் ஏற்கெனவே 1-9-2021 முதல் 9,10,11 மற்றும் 12 ம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியருக்கான அனைத்து அரசுத் துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு விடுதிகள், தனியார் கல்வி நிறுவனங்களின் விடுதிகள் (School and College Hostels) ஆகியவை இயங்க அனுமதிக்கப்படுகிறது. அதேபோல, பணிபுரிபவர்களுக்கான தனியார் தங்கும் விடுதிகள் (working men/women hostel) கொரோனா நோய்த்தொற்று தடுப்பிற்கான நிலையான வழிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது” என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேற்படி விடுதிகளில் பணியாற்றும் விடுதி காப்பாளர்கள், சமையலர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பதை சம்பந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

Post Top Ad