நீட் அலசல் – 1: நுழைவுத் தேர்வு என்பதே தவறானதா?
தமிழகத்தில் பொது மனநிலையாகக் கட்டமைக்கப்பட்டிருப்பது எல்லா விதமான நுழைவுத் தேர்வுகளுக்கும் தகுதித் தேர்வுகளுக்கும் எதிரான ஒரு மனப்பான்மையே. இம்மாதிரியான தேர்வுகள் அனைத்துமே மாணவர்களுக்கு அழுத்தம் தருபவை, ஒருசில பின்னணியிலிருந்து வருவோருக்கு மட்டுமே ஆதரவானவை, சமூகநீதிக்கு எதிரானவை ஆகிய எண்ணங்கள் தமிழ்நாட்டில் நிலவுகின்றன. இதற்கு மாற்றான கருத்துகள் இருந்தால் அவை அதிகமாகப் பேசப்படுவதில்லை.
ஒரு மாணவர் ஒருபோதும் இன்னொரு தேர்வை விரும்ப மாட்டார். அதற்கான தயாரிப்பு, உழைப்பு, நேரம், பணச் செலவு, மன உளைச்சல் ஆகியவையே இதற்கான காரணம். பெற்றோர்களும் இன்னொரு தேர்வை விரும்ப மாட்டார்கள். பள்ளி இறுதித் தேர்வில் பெறும் மதிப்பெண்களுக்கு மேல் வேறு என்ன தேவை உள்ளது என்ற எண்ணம் தமிழகத்தில் ஓங்கி ஒலிப்பதைக் காணலாம்.
நுழைவுத் தேர்வுகள் புதிதல்ல
இந்நிலையில் நாம் நுழைவுத் தேர்வுகள் குறித்து மேலோட்டமாகப் பார்த்துவிடுவோம். மத்திய அரசுப் பணியாகட்டும், மாநில அரசுப் பணியாகட்டும், இரண்டுக்குமே நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுவதைப் பார்க்கிறோம். இன்று நீட் எனப்படும் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வைப் போன்ற ஒரு தேர்வுதான் இது. மாநில அரசுப் பணிக்கு எனத் தனித் தேர்வாணையமே உள்ளது. விதவிதமான பணிகளுக்கு இது தேர்வுகளை வைக்கிறது. இதேபோல அரசுப் பள்ளிகளுக்கான
ஆசிரியர் பணிக்கும் தேர்வாணையம் உள்ளது. அதுவும் தேர்வுகளை நடத்துகிறது.
இந்தத் தேர்வுகள், எழுதுவோரிடையே மன உளைச்சலை ஏற்படுத்துவதில்லையா?
இந்தத் தேர்வுகளுக்கான தேவை என்ன? குறைவான இடங்கள் உள்ளன. அதிகமான பேர் போட்டி போடுகிறார்கள். வெளிப்படையான முறையில், சமூக நீதிக்குக் குந்தகம் விளையாமல், நபர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கு ஒரு வழி, நுழைவுத் தேர்வு அல்லது போட்டித் தேர்வு. ஏன் இந்தத் தேர்வுகளுக்கு பத்து, பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்களையோ அல்லது கல்லூரி மதிப்பெண்களையோ எடுத்துக்கொள்வதில்லை?
ஏன் இங்கெல்லாம் ஏகே ராஜன் கமிட்டி போல் ஒன்றைப் போட்டு ஏதோ ஒரு முறையில் மதிப்பெண் தரப்படுத்தல்மூலம் ஆட்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என்று சொல்வதில்லை?
தற்போதைக்கு போட்டித் தேர்வு முறையிலான தேர்வுமுறை, வெளிப்படையானது, நியாயமானது என்று அரசாலும் மக்களாலும் அரசுப் பணிகளைப் பொருத்தமட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. இங்குமே பயிற்சி தர, தெருவுக்குத் தெரு, கோச்சிங் நிறுவனங்கள் உள்ளன. யுபிஎஸ்சி முதல் டிஎன்பிஎஸ்சி வரை எழுதுவோர் அனைவருமே முதல் முறையிலேயே தேர்வில் வெற்றிபெறுவதில்லை. மீண்டும் மீண்டும் எழுதியே மிகப் பெரும்பாலானோர் உள்ளே வருகிறார்கள்.
யாருக்கு நன்மை, யாருக்குத் தீமை?
School students
நாம் கேட்க வேண்டிய முக்கியமான கேள்வி, நீட் என்னும் தேர்வு வந்ததால் யாருக்கு நன்மை, யாருக்குத் தீமை என்பது. ஏகே ராஜன் குழு சில புள்ளிவிவரங்களை அளித்துள்ளது. இக்குழு, முன்முடிவுடன் இந்தப் பிரச்னையை அணுகியிருந்தாலும், இது கொடுத்துள்ள புள்ளிவிவரங்களும் ஆலோசனைகளும் பலவற்றைத் தெளிவாக்கியுள்ளன.
நீட் வருவதற்குமுன்பு 2010 முதல் 2017 வரை, ஏழு ஆண்டுகளில் சிபிஎஸ்இ பள்ளிகளிலிருந்து தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளுக்குச் சென்றது வெறும் 71 பேர் மட்டுமே. குறைந்தபட்சம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களில், அதுவும் சிறந்த பள்ளிகளில் ஆங்கில மீடியத்தில் படித்துவந்த இந்த மாணவர்களில் ஆண்டுக்கு 10 பேர் என்ற கணக்கில்தான் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடிந்துள்ளது. இது எந்த வகை சமூக நீதி? எந்த மதிப்பெண் தரப்படுத்தலும் இல்லாமல், சிபிஎஸ்இ திட்டத்தில் வாங்கும் மதிப்பெண்களையும் தமிழ்நாடு சமச்சீர் பாடத்திட்டத்தில் வாங்கும் மதிப்பெண்களையும் ஒரே அளவில் எடுத்துக்கொண்டு, நுழைவுத் தேர்வு இல்லாமல் அனுமதித்ததன் காரணமாகவே இது நடந்தது.
நீட் அறிமுகப்படுத்தப்பட்டதும் ஆண்டுக்கு ஆயிரத்துக்கும் மேல் சிபிஎஸ்இ மாணவர்கள் மருத்துவ இடங்களைப் பிடித்தனர். இதனை ஏகே ராஜன் கமிட்டி ஏதோ பெரும் அவலமாகப் பார்க்கிறது. அவர்களும் தமிழக மாணவர்கள்தாமே? அவர்களும் இட ஒதுக்கீட்டுக்கு உட்பட்டுதானே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்?
நீட்டுக்கு முன், பத்தாவதுவரை சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்துவிட்டு மாணவர்கள் 11, 12 வகுப்புகளுக்கு தமிழ்நாடு சமச்சீர் பாடத்திட்டத்துக்கு
மாறிக்கொண்டிருந்தனர். ஏனெனில் சிபிஎஸ்இயில் படித்தால், அவர்களுடைய தேர்வில், தமிழ்நாடு சமச்சீர் தேர்வில் கிடைப்பதுபோல் தாராளமான மதிப்பெண்கள் கிடைக்காது. அப்படி மாறாவிட்டால், உங்களுக்கு மருத்துவ இடங்கள் கிடைக்க வாய்ப்பே இல்லை என்பதுதான் நிதர்சனமாக இருந்தது.
அரசுப் பள்ளி மாணவர்களின் நிலை
neet 2
இதே காலகட்டத்தில் அரசுப் பள்ளியில் படித்துவந்த எத்தனை மாணவர்களுக்கு மருத்துவ இடங்கள் கிடைத்தன? அரசிடம் முழுமையான தகவல்கள் இல்லை. ஆனால் 2014-15 முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு சுமார் 35 பேருக்கு மட்டுமே இவ்வாறு இடம் கிடைத்துள்ளது. நீட் கொண்டுவந்த பின், இந்த மிகச் சுமாரான எண்ணிக்கை மேலும் கீழே இறங்கி ஆண்டுக்கு சராசரியாக ஆறு இடங்கள் என்று ஆனது. ஆக நீட் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கப்போவதில்லை என்பதுதான் உண்மை. அதுவே, 7.5% இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டதும், சென்ற ஆண்டு 336 என்று உயர்ந்துள்ளது. அதாவது, அதற்குமுன் பத்தாண்டுகளில் நடக்காத அளவுக்கு சென்ற ஆண்டு மட்டுமே அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்புக்குச் சென்றுள்ளனர்.
ஆக, நீட்டுக்கு முந்தைய ஏழு ஆண்டுகள் நமக்குத் தரும் காட்சி இதுதான். அரசுப் பள்ளியிலிருந்து சொல்லிக்கொள்ளும் எண்ணிக்கையில் ஒருவரும் கிடையாது. சிபிஎஸ்இ பள்ளிகளிலிருந்து அதைவிடக் கீழ். பயன் அடைந்தவர்கள் அனைவருமே தமிழ்நாடு சமச்சீர் பாடத்திட்டத்தில் தனியார் பள்ளிகளில் பயின்றவர்கள்.
நீட்டும், 7.5% இட ஒதுக்கீடும் இதனை மாற்றியது. முதல்முறையாக சிபிஎஸ்இ மாணவர்களுக்குச் சரியான வாய்ப்பு கிடைத்தது. பல சமச்சீர் பள்ளிகள் சிபிஎஸ்இ முறைக்கு மாறின. இதனால் கிட்டத்தட்ட ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் சமச்சீரிலிருந்து வெளியேறி சிபிஎஸ்இ திட்டத்தின்கீழ் வந்தனர். இதன் காரணமாக, சிபிஎஸ்இ மாணவர்கள் மேலும் அதிக இடங்களைக் கைப்பற்றினர்.
மொத்தத்தில், முந்தைய மதிப்பெண் முறையில், மருத்துவ இடம் பெற விரும்பிய மாணவர் சமச்சீர் பாடத்திட்டத்துக்கு மாற்றிக்கொண்டார். இன்று நீட் முறையில், அதே மாணவர் தன்னை சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு
மாற்றிக்கொள்கிறார். அனைவருமே தனியார் பள்ளி மாணவர்கள் என்பதுதான் இங்கே கவனிக்கத்தக்கது.
குறை எங்கே உள்ளது? தமிழக அரசின் பாடத்திட்டத்தில் அல்ல. ஆனால் கற்பிக்கும் முறையிலும் மதிப்பெண்கள் வழங்கும் முறையிலும்தான் குறைபாடே. அதனை மாற்றித்தான் ஆக வேண்டுமா, ஏன் நீட் தேவை, எல்லாம் நல்லாத்தானே போய்க்கிட்டிருந்துச்சு என்றெல்லாம் கேட்போரிடம் நாம் சொல்லவேண்டியது, இல்லை என்ற பதிலைத்தான்.
நுழைவுத் தேர்வில் என்ன பிரச்சினை?
entrance exam
ஏழைகள், கிராமப்புற மாணவர், பெண்கள் எல்லோருக்கும் நீட் எதிரானது என்று ஏகே ராஜன் கமிட்டி தீர்ப்பு எழுதுகிறது. உண்மையில் தமிழகத் தேர்வுமுறையும் மதிப்பெண் முறையுமே அனைத்து மாணவர்களுக்கும் எதிரானது.
நீட் தேர்வோ, ஜேஇஇ தேர்வோ, அதில் உள்ள சற்றே சிந்தனையைத் தூண்டக்கூடிய கேள்விகளுக்கான பதிலைச் சொல்ல சமச்சீர் மாணவர்களுக்குத் தெரிவதில்லை. அதன் காரணமாகவே அவர்கள் கோச்சிங் வகுப்புகளை நாடிச் செல்கிறார்கள். பயிற்சி வகுப்புகள் எல்லாம் பணத்தை அள்ளிச் செல்வதாகவும் மாணவர்கள் இரண்டு மூன்று முறை நீட் எழுதவேண்டியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதற்குக் காரணம் சமச்சீர் தேர்வு முறையும் அதற்குப் பழக்கப்படுத்தப்பட்டுள்ள ஆசிரியர்களும் மாணவர்களுமே. சமச்சீர் மாணவர்களுக்கு நீட் கேள்விகளை எப்படி எதிர்கொள்வது என்று சொல்லிக்கொடுத்த மறுமுறையே அவர்கள் நீட்டிலும் தேர்ச்சிபெறுகிறார்கள். இது தேவைப்படாத சிபிஎஸ்இ மாணவர்கள் பெரும்பாலும் முதல் முறையிலேயே உள்ளே வருகிறார்கள்.
நீட்டுக்கு மாற்றாக, மதிப்பெண் தரப்படுத்தலை ஏகே ராஜன் கமிட்டி முன்வைக்கிறது. இது சரியாகச் செய்யப்பட்டால் சிபிஎஸ்இ போன்ற பிற பாடத்திட்ட மாணவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். ஆனால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு கட்டாயம் வேண்டியிருக்கும். மதிப்பெண் மட்டும்தான் என்றால் மாணவிகள் மாணவர்களைவிட அதிக இடம் பெறுவார்கள். யாரோ ஒருவருக்கு நன்மை என்றால் இன்னொருவருக்கு அது தீமையே. இது zero-sum-game என்ற நிலையில்தான் இருக்கும்.
No comments:
Post a Comment