மீண்டும் உயிர் கொடுத்த ஸ்டாலின்: செப்.,26இல் ‘தி ரைசிங் சன்’..!
திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி 80 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்து பயணித்து வருகிறது. திமுக உடன்பிறப்புகளை உயிர்ப்புடன் வைத்திருக்க பத்திரிகையாளரான கலைஞர் கருணாநிதிக்கு முரசொலி மிகவும் உதவியது. திமுகவின் கருத்துகளை பிற மாநிலத்தவர் அறிந்து கொள்ள கடந்த 1971ஆம் ஆண்டு கலைவாணர் அரங்கில் ‘தி ரைசிங் சன்’ எனும் ஆங்கில நாளேடு தொடங்கப்பட்டது.
முரசொலி மாறனை ஆசிரியராகக் கொண்டு
தொடங்கப்பட்ட அந்த ஆங்கில வார இதழ், பல்வேறு காரணங்களால் 1975ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, கடந்த 2005ஆம் ஆண்டு அண்ணா அறிவாலயத்தில் அப்போதைய திமுக தலைவரான கருணாநிதியால் மீண்டும் ‘தி ரைசிங் சன்’ தொடங்கப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், 10 ஆண்டுகள் கழித்து தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளது. தேசிய அரசியலில் தவிர்க்க முடியாத ஆளுமையாகவும் மாநிலக் கட்சியான திமுக மாறியுள்ளது. அதன் தொடர்ச்சியாக, திமுகவின் கொள்கைகளை, திமுக அரசின் செயல்பாடுகளை பிற மாநிலத்தவர், வெளிநாட்டினர் அறிந்து கொள்ளும் வகையில், அக்கட்சியின் அதிகாரப்பூர்வ ஆங்கில நாளேடான ‘தி ரைசிங் சன்’-க்கு ஸ்டாலின் மீண்டும் உயிர் கொடுத்துள்ளார்.
அதன்படி, திமுகவின் அதிகாரப்பூர்வ ஆங்கில நாளேடு ‘தி ரைசிங் சன்’ வருகிற 26 ஆம் தேதி மாலை வெளியிடப்படவுள்ளது. இதனை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் நிகழ்வில் திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் வெளியிடுகிறார்.
No comments:
Post a Comment