ஆவின் லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்ததால் ரூ. 300 கோடி இழப்பு - சங்கம் வேதனை
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவன தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் கடந்த கால ஆட்சியாளர்களால் சுமார் 1000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பைச் சந்தித்திருக்கும் நிலையில் தற்போதைய திமுக அரசு பால் விற்பனை விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்ததால் கூடுதலாக சுமார் 300 கோடி ரூபாய் வரை இழப்பைச்
சந்தித்து வருகிறது.
மேலும் எந்த ஒரு பால் நிறுவனமாக இருந்தாலும் பாலைக் கொள்முதல் செய்து பாலாகவே விற்பனை செய்தால்தான் இழப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியும். ஆனால், ஆவின் நிறுவனத்தில் நாளொன்றுக்கு சுமார் 39 லட்சம் லிட்டர் வரை பால் கொள்முதல் செய்யப்படுவதாகச் சொல்லப்படும் நிலையில், பாக்கெட் மூலம் விற்பனை என்னவோ வெறும் 26 லட்சம் லிட்டர் வரை மட்டுமே நடைபெறுகிறது. அப்படியானால் தினசரி உபரியாகும் சுமார் 13 லட்சம் லிட்டர் பாலை உப பொருட்களாகவோ, பால் பவுடராகவோ உருமாற்றம் செய்தாக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
இதில் தமிழகத்தில் ஆவின் பால் உப பொருட்களுக்குத் தேவை அதிகம் இருந்தாலும் கூட அதனை முறையாகச் சந்தைப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தப்படாததால் வேறு வழியின்றி உபரியாகும் பாலைப் பால் பவுடராக மாற்றவேண்டிய நிர்பந்தம்
ஆவின் நிர்வாகத்திற்கு ஏற்படுகிறது. அதன் காரணமாகவே தற்போது ஆவினில் சுமார் 16 ஆயிரம் டன் பால் பவுடர், 6 ஆயிரம் டன் வெண்ணெய் தேக்கமடைந்திருக்கிறது. அதன் காரணமாக ஆவினுக்கு இழப்பு மேல் இழப்பாக இன்னும் பலநூறு கோடி ரூபாய் கூடுதல் இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட பாலுக்கான தொகை சுமார் 10 வார காலமாக பட்டுவாடா செய்யப்படாமல் சுமார் 600 கோடி ரூபாய் வரை நிலுவையில் இருப்பதால் ஆவினுக்கு பால் வழங்கும் உற்பத்தியாளர்களான விவசாயப் பெருமக்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகி வருகின்றனர்.
ஆவினில் தற்போதைய சூழலில் ஏற்படும் இழப்புகளைச் சரி செய்யவும், பால் உற்பத்தியாளர்களிடம் கொள்முதல் செய்யப்பட்ட பாலுக்கான தொகையை நிலுவையின்றி வழங்கிடவும் வேண்டுமானால் பாலைப் பவுடராக மாற்றி இருப்பு வைக்காமல் பாலாகவே விற்பனை செய்ய நடவடிக்கை எடுப்பதே சரியான தீர்வாக இருக்க முடியும்.
அதற்கு பால் முகவர்களுக்கு தமிழகம்
முழுவதும் ஒரே அளவில் சதவிகித அடிப்படையில் பால் விற்பனைக்கான கமிஷன் தொகையை வழங்குதல், உழைப்பிற்கேற்ற ஊதியம் என்பதைப் போல பால் விநியோகம் செய்வதற்கு ஆகின்ற செலவினங்களைக் கணக்கிட்டு தனியார் பால் நிறுவனங்களைப் போல் பால் விற்பனைக்கான கமிஷன் தொகையோடு ஊக்கத் தொகையும் வழங்குதல் மற்றும் தனியார் பால் நிறுவனங்களைப் போல் பால் முகவர்களுக்கும், ஆவின் நிறுவனத்திற்கும் இடையே இடைத்தரகர்கள் முறை இல்லாமல் பால் முகவர்களுக்கு நேரடி வர்த்தகத் தொடர்புகளை வழங்குதல் போன்றவற்றைச் செயல்படுத்தினால் மட்டுமே ஆவின் பால் விற்பனை பன்மடங்கு பெருகும் எனக் கடந்த காலங்களில் ஆவின் நிர்வாக இயக்குநராக இருந்த அபூர்வ வர்மா ஐஏஎஸ் தொடங்கி காமராஜ், வள்ளலார், நந்தகோபால் தற்போதைய நிர்வாக இயக்குநர் கந்தசாமி ஐஏஎஸ் வரை பல நிர்வாக இயக்குநர்களை எங்களது சங்கத்தின் சார்பில் பலமுறை நேரில் சந்தித்து எடுத்துக் கூறியும், மனுவாக அளித்தும் நடவடிக்கை என்னவோ வெறும் பூஜ்ஜியமாகவே இருக்கிறது.
நுகர்வோருக்குப் பால் குறைந்த விலையிலும், உற்பத்தியாளர்களுக்குப் பாலுக்கான கொள்முதல் விலை அதிகமாகவும் கிடைக்க வேண்டும் என்பதே ஆவினின் நோக்கம் என்றால் பால் முகவர்கள் இல்லாமல் ஆவின் பால் தானாகவே நுகர்வோராகிய பொதுமக்களுக்குச் சென்றடைந்து விடுமா..? என்பது குறித்து இதுவரை இருந்த எந்த நிர்வாக இயக்குநரும் சிந்திக்காமல் போனதே ஆவின் பால் விற்பனை அதிகரிக்காமல் போனதற்கு மிக முக்கியக் காரணமாகும்.
ஒருவேளை இதுவரை இருந்த ஒவ்வொரு நிர்வாக இயக்குநர் தரப்பில் இருந்தும் கூறப்பட்டதில் உண்மை இருக்குமானால் ஆவின் பால் விற்பனையானது பலமடங்கு அதிகரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பல ஆண்டுகளாகவே நாளொன்றுக்கு சுமார் 25 லட்சம் முதல் 26 லட்சம் லிட்டருக்கு மேல் விற்பனை அதிகரிக்கவே இல்லை என்பதில் இருந்தே பால் முகவர்களின் உழைப்பு அங்கீகரிக்கப்படாமல், உரிமைகள் மறுக்கப்பட்டு, ஆவினைச் சுரண்டி தாங்கள் சம்பாதிக்க இடைத்தரகர்களை வைத்துக் கொண்டு ஆவின் நிர்வாகம் செயல்பட்டு வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
தற்போதைய சூழலில் ஆவின் நிறுவனம் இழப்பில் இருந்து மீளவும், மேலும், மேலும் இழப்பு ஏற்படாமல் இருக்கவும் வேண்டுமானால் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் பாலைப் பாலாகவே விற்பனை செய்தால் மட்டுமே அது 100% சாத்தியமாகும் என்பதால் பால் முகவர்களின் நீண்ட காலக் கோரிக்கைகளுக்கு உடனடியாகச் செவிமடுத்து அவற்றை நிறைவேற்ற ஆவின் நிர்வாகம் முன் வர வேண்டும். இல்லையென்றால் ஆவின் நிறுவனத்தின் அழிவை எவராலும் தடுக்க முடியாது என்பதை தமிழக அரசு இனியாவது கவனத்தில் கொள்ள வேண்டும்'' என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment