நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் அக்டோபர் 6, 9 தேதிகளில் நடைபெற உள்ளது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் குறித்து உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
செப்டம்பர் 4ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த மேலும் ஏழு மாத அவகாசம் கேட்டு மனு செய்தது. அந்த மனு மீதான விசாரணை நேற்று செப்டம்பர் 20 உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் நடைபெற்றது.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜரானார். தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜரானார்.
அப்போது தலைமை நீதிபதி, "தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு என்ன ஆனது? ஏற்கனவே உங்களுக்கு மூன்று முறைக்கு மேல் அவகாசம் கொடுத்தாகிவிட்டது. இன்னும் எதற்காக தேர்தல் நடத்தாமல் இழுத்தடிக்கிறீர்கள்?" என்று கோபமாகக் கேட்டார்.
அப்போது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, "நீதிபதி அவர்கள் இந்த மனுவை பொறுமையாகப் படித்துப் பார்க்க வேண்டும். கொரோனா உள்ளிட்ட காரணங்களால் தேர்தல் நடவடிக்கைகளை நடத்த முடியவில்லை. எங்களுக்கு 7 மாத அவகாசம் கூட வேண்டாம். அதில் பாதி அளவாக மூன்று முதல் 4 மாத அவகாசம் கூட போதுமானது. அதற்குள் நாங்கள் நகராட்சி தேர்தலை நடத்தி முடித்து விடுகிறோம்" என்று கூறினார்.
அதற்கு தலைமை நீதிபதி, "சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களை எல்லாம் சரியான நேரத்தில் நடத்த முடிகிறபோது உள்ளாட்சித் தேர்தல்களை மட்டும் ஏன் குறிப்பிட்ட காலத்துக்குள் நடத்த முடியவில்லை? இந்த விவகாரத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் புதிய பிரமாண பத்திரத்தை இன்னும் இரண்டு நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இனிமேலும் அவகாசம் கோராமல் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தி முடிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டார்.
இதையடுத்து தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் நகராட்சி மாநகராட்சி தேர்தல் நடத்துவதற்கான புதிய பிரமாணப் பத்திரத்தை விரைவில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கிறது.
இதனால் இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்திலோ நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment