மு.க. ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்த ஓ.பி.எஸ்..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, September 11, 2021

மு.க. ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்த ஓ.பி.எஸ்..!

மு.க. ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்த ஓ.பி.எஸ்..!

''பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11 ஆம் நாள் 'மகாகவி' நாளாக அரசு சார்பில் கொண்டாடப்படும் என்று முதல்வர் அறிவித்திருப்பது அனைவரும் வரவேற்கக்கூடிய ஒன்று'' என ஓ பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்
அது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, '' பெரியாரின் பிறந்த நாள் '
சமூக நீதி' நாளாகக் கொண்டாடப்படும் என்று முதல்வர் சில தினங்களுக்கு முன் அறிவித்தபோது, அதனை நான் வரவேற்றதோடு, இந்திய விடுதலைக்கு முன், மொழிப் பற்றினையும், நாட்டுப் பற்றினையும், ஒருமைப்பாட்டினையும், காவிரி போல் பெருக்கெடுத்து ஓடும் தன் பாட்டுத் திறத்தால், கவிதை நயத்தால் உணர்த்தி, உறங்கிக் கிடக்கும் மக்களைத் தட்டி எழுப்பி, விடுதலை உணர்வினை ஊட்டிய மகாகவி பாரதியாரோடு ஒப்பிட்டு தமிழகத்தில் சமுதாய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் பெரியார் என்று கூறியிருந்தேன்.

இந்த நிலையில், பாரதியாரின் நூற்றாண்டு நினைவு தினத்தையொட்டி, பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11 ஆம் நாள் 'மகாகவி' நாளாக அரசு சார்பில் கொண்டாடப்படும் என்று முதல்வர் அறிவித்திருப்பது அனைவரும் வரவேற்கக்கூடிய ஒன்று.

தமிழ் மொழியின் சிறப்பினை உலகுக்கு உணர்த்திய கவிஞர் பாரதியார். மொழிப்பற்று உடையவனே நாட்டுப்பற்று உடையவனாய் வாழ இயலும் என்பதை மெய்ப்பித்துக் காட்டியவர் பாரதியார். விடுதலைப் பாடல்களால் தமிழகத்தை வீறுபெறச் செய்தவர் பாரதியார்.

பாரதி ஒரு பன்மொழிப் புலவர்.

ஆங்கிலம், பிரெஞ்சு, தெலுங்கு, இந்தி என, பல மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார். பல மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்த பாரதி, 'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்' எனப் பாடினார் என்றால், அந்த அளவுக்கு உயர்ந்த மொழி தமிழ் மொழி என்பதுதான் அதன் உள்ளார்ந்த பொருள்.

தமிழ் மொழியின் சிறப்பையும், உயர்வையும் கூறி இளைஞர்களின் உள்ளங்களில் இன்றளவிலும் சிம்மாசனமிட்டு இருப்பவர் பாரதியார். மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் சிலகாலம் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய பாரதி, பல செய்தி இதழ்களையும் நடத்திய பெருமைக்குரியவர்.


'செந்தமிழ் நாடெனும் போதினிலே, இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே' எனத் தாய் நாட்டின் உயர்வை வியந்து பாடிய பாரதி, நாட்டுப் பற்றினைப் போற்றும் வகையில், 'வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர், வாழிய பாரத மணித் திருநாடு' என்று பாரத நாட்டையும் போற்றி மகிழ்ந்தார்.

'முப்பது கோடி முகமுடையாள் - உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள் - இவள் செப்புமொழி பதினெட்டுடையாள் - எனிற் சிந்தனை ஒன்றுடையாள்' எனப் பாடி, இந்தியர்களின் ஒற்றுமை உணர்வைப் படம் பிடித்துக் காட்டியவர் பாரதியார்.

'ஆணும், பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவில் ஓங்கி இவ்வையகம் தழைக்குமாம்' என்ற பாரதியாரின் வாக்குக்கிணங்க, பெண்களின் முன்னேற்றத்துக்காகவும், பெண்ணுரிமையை நிலைநாட்டும் வகையிலும், பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், தாலிக்கு தங்கத்துடன் கூடிய திருமண நிதியுதவித் திட்டம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம், மகளிர் இரு சக்கர வாகனத் திட்டம் என பல்வேறு திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தியதோடு, சென்னை திருவல்லிக்கேணியில் பாரதியார் வாழ்ந்த இல்லத்தைப் புதுப்பித்து அதனை மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்தவர் ஜெயலலிதா.

No comments:

Post a Comment

Post Top Ad