மோடியும், அண்ணாமலையும் இரங்கல் தெரிவிக்காதது ஏன்? கி.வீரமணி கேள்வி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, September 21, 2021

மோடியும், அண்ணாமலையும் இரங்கல் தெரிவிக்காதது ஏன்? கி.வீரமணி கேள்வி!

மோடியும், அண்ணாமலையும் இரங்கல் தெரிவிக்காதது ஏன்? கி.வீரமணி கேள்வி!

சென்னை பெரியார் திடலில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஒன்றிய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவது தொடர்பாக திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கீ.வீரமணி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. அனைத்துக்கட்சி கூட்டத்தில் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, காங்கிரஸ் சார்பில் கோபண்ணா, சிபிஎம் சார்பில் பாலகிருஷ்ணன், சிபிஐ சார்பில் மருத்துவர் ரவீந்திரநாத், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மதிமுக சார்பில் வந்தியத்தேவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹீருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பிக் , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அபூபக்கர், திராவிட தமிழ் இயக்க பேரவை தலைவர் சுப வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் நீட் தேர்வுக்கு எதிராக 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஆசிரியர் கீ.வீரமணி, நீட் தேர்வு சமூகநீதிக்கு எதிராகவும், மாநில உரிமைகளை பறிப்பதாகவும், எளிய மாணவர்கள் கனவை சிதைப்பதாகவும் உள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக மசோதா நிறைவேற்றி அனுப்பப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது. திமுக அரசையும் முதலமைச்சரையும் பாராட்டுகிறோம். இன்றைய அனைத்துக்கட்சி கூட்டத்தில் நீட் தேர்வுக்கு எதிரானவை உட்பட ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்.

அதிமுக ஆட்சியில் நீட் தேர்வை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்றினாலும், அறிஞர்கள் குழு அமைத்து தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. ஆனால் திமுக ஆட்சியில் நீதியரசர் ஏ.கே.ராஜனின் தலைமையிலான கல்வியாளர்கள் குழுவினரின் அறிக்கையை கொண்டு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாவை நிராகரிக்க முடியாது. அரசியல் ரீதியாக தீர்மானத்தை நிராகரித்தால், அரசியல் ரீதியாக சந்திக்க மக்களை தயார்படுத்த வேண்டும் என்றும் கி.வீரமணி தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், “நீட் தேர்வு குறித்து மக்களுக்கு விளக்க பெருந்திரள் மக்கள் எழுச்சி இயக்கமாக பெரிய அளவிலான மாநாடு. கொரோனா விதிகளை பின்பற்றி நடத்தப்படும். அவ்வப்போது இந்த குழு சேர்ந்து ஆராய்ந்து நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும். தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சியில் கொண்டுவந்த நுழைவுத்தேர்வை, கலைஞர் ஆட்சி பொறுப்பேற்றதும், நீதியரசர் அனந்தபத்மநாபன் தலைமையில் குழு அமைத்து நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. மக்களுடைய எண்ணங்கள் முன்னே சென்றால் சட்டம் பின்னாலே வந்துவிடும் என்ற கூற்றுக்கு ஏற்ப நீட் தேர்வும் ரத்து செய்யப்படும்” என்றார்.



சமூகநீதியில் அக்கறை இருந்தால் நீட் தேர்வில் அதை காண்பிக்கலாமே என கூறிய அவர், இதுவரை நீட் தேர்வால் இறந்த குழந்தைகளுக்கு இரங்கல் கூட மோடியோ அல்லது அண்ணாமலையோ தெரிவிக்காதது ஏன் என கேள்வியெழுப்பினார்.

நீட் தேர்வுக்கு எதிரான கடந்த கூட்டத்திற்கே அதிமுகவினருக்கு அழைப்பு கொடுத்தும் அவர்கள் வரவில்லை என தகவல் தெரிவித்த அவர், நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுகவினருக்கு இப்போதுதான் ஞானோதயம் வந்துள்ளது. அதற்கே பாராட்டுக்கள் என தெரிவித்தார். தனியார் நீட் பயிற்சி மையங்கள் கல்வியை வணிகமயக்குகிறது என்றும் நீட் ஒழிக்க வேண்டும் என்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்றும் கி.வீரமணி அப்போது தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad