நீட் ஒரு உயிர்க்கொல்லி தேர்வு.. கொதிக்கும் கமல் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, September 22, 2021

நீட் ஒரு உயிர்க்கொல்லி தேர்வு.. கொதிக்கும் கமல்

நீட் ஒரு உயிர்க்கொல்லி தேர்வு.. கொதிக்கும் கமல்

சமத்துவத்திற்கும், சமூகநீதிக்கும் எதிரான உயிர்க்கொல்லி நீட் தேர்வு என கமல்ஹாசன் கடுமையாக சாடியுள்ளார்.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நீட் ஓர் உயிர்க்கொல்லித் தேர்வு என்பதை உரக்கச் சொல்கிறது நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கை. நீட் தேர்வின் பாதிப்புகளை ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் அமைக்கபட்ட குழுவின் அறிக்கை, இந்த தேர்வின் தீவிளைவுகளை பட்டியலிடுகிறது.

அதன்படி, கிராமப்புற ஏழை மாணவர்கள், தமிழ்வழியில் பயின்றோர் மருத்துவராகும் கனவை நீட் தேர்வு சிதைக்கிறது. நீட் தேர்வுக்கு பின் மருத்துவப் படிப்பில் சேர்ந்த தமிழ் வழியில் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை 14.44 சதவீதத்தில் இருந்து வெறும் 1.7 சதவீதமாக சரிந்துள்ளது.

இது சமத்துவத்துக்கும் சமூகநீதிக்கும் எதிரான தேர்வு என்பதற்கு இந்தவொரு புள்ளிவிவரமே போதுமானது. நீட் தேர்வுக்கு பின் எம்பிபிஎஸ் படிப்பில் சிபிஎஸ்இ மற்றும் ஆங்கில வழியில் படித்த மாணவர்கள்தான் அதிக இடங்களை கைப்பற்றியுள்ளனர்.

நீட் தேர்வில் மருத்துவப் படிப்பில் சேர்ந்தவர்களில் 90% தனியார் கோச்சிங் செண்டர்களில் பயிற்சி பெற்றவர்கள். நீட் தேர்வின் பின்னால் இருப்பது வணிக நோக்கம்தான் என்பது, நான் ஆரம்பம் முதலே சொல்லிவரும் ஒன்று. இந்தப் புள்ளிவிவரங்கள் அதை உறுதி செய்கின்றன.



நாட்டிலேயே சிறந்த மருத்துவக் கட்டமைப்பைக் கொண்டிருப்பது தமிழகம். இந்த தேர்வு நீடிக்குமானால் தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பு சிதையும். நீட் தேர்வு அறிமுகமான பிறகு தமிழ் வழியில் மேல்நிலைக்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையில் பெரும் வீழ்ச்சி நிகழ்ந்துள்ளது.

உலகம் முழுக்க தாய்மொழிக் கல்வி ஊக்குவிக்கப்பட்டு வரும் சூழலில், நீட் தேர்வு தாய்மொழிக் கல்விக்கு எதிரான மனோநிலையை வளர்க்கிறது. நகர்ப்புறத்தில் பிறந்த பண வசதி படைத்தவர்கள் மட்டுமே மருத்துவராகும் வாய்ப்பினை உருவாக்கும் இந்த அறமற்ற உயிர்க்கொல்லி தேர்வினை தமிழகத்தில் இருந்து மட்டுமல்ல, இந்தியாவில் இருந்தே விரட்டியடிக்க வேண்டும்.

உண்மைகளை வெளிக்கொணர்ந்து சட்டப்போராட்டத்திற்கான வழிவகைகளையும் ஆராய்ந்து சொன்ன ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவினருக்கு மநீம வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது. குழுவின் பரிந்துரைகளின்படி விரைவில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad