திருப்பூரில் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டார்.
திருப்பூர் திருமுருகன்பூண்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பாண்டியன் நகர் பகுதியில் வசித்து வரும் 14 வயது சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு,சிறுமியை ஆடையில்லாமல் தனது செல்போனில் புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு அதனைக்காட்டி மிரட்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் பாண்டியன்நகர் சவுண்டம்மன் கோவில் இரண்டாவது வீதியை சேர்ந்த பாண்டியன் (29). இவர் தங்களது மகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டதாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பாண்டியன் மீது திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக பாண்டியன் நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் பெண் குழந்தைகளுக்கு அச்சுறுத்தலையும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டதால், பாலியல் குற்றவாளி பாண்டியனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ஏ.ஜி.பாபு உத்திரவிட்டார். இதனை அடுத்து இன்று கோயமுத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாண்டியனை ஓர் ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆணை வழங்கப்பட்டது.
இந்த வருடத்தில் மட்டும் திருப்பூர் மாநகரத்தில் பொது அமைதிக்கும் பொதுமக்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தும் வகையில் குற்ற செயல்களில் ஈடுபட்ட 11 நபர்கள் இதுவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment