கரோனா அறிகுறிகள் இருந்தால் என்ன செய்வது?
கரோனா தொற்றுக்கான அறிகுறிகளான காய்ச்சல், இருமல், உடல் சோர்வு, வயிற்றுப்போக்கு, மூச்சுத்திணறல் போன்றவற்றையில் ஏதேனும் இருப்பின் என்ன செய்வது என்று குழம்ப வேண்டாம்.
இது குறித்து தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை ஒருவழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.
யாருக்கேனும் கரோனா அறிகுறி இருந்தால், வீடு வீடாக வந்து காய்ச்சல் ஏதேனும் இருக்கிறதா என்று ஆய்வு செய்யும் சுகாதாரப் பணியாளர்களிடம் இது பற்றி தெரிவியுங்கள். அவர்கள் உங்களை அருகிலுள்ள சிறப்பு காய்ச்சல் முகாமுக்குச் செல்ல வழிநடத்துவார்கள்.
அல்லது உங்கள் பகுதிக்கு அருகே காய்ச்சல் முகாம் நடந்தால் தனிமனித இடைவெளியைப் பின்பற்றி அங்குச் சென்று ஆலோசனை பெறவும்.
கரோனா அறிகுறி இருந்தால், அருகிலுள்ள கரோனா பரிசோதனைக்கான மாதிரி சேகரிப்பு மையத்துக்குச் சென்று சளி மாதிரிகளை பரிசோதனைக்குக் கொடுக்கவும். பரிசோதனை முடிவுகள் வரும் வரை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஒருவேளை கரோனா உறுதி செய்யப்பட்டால்..
அச்சம் கொள்ளத் தேவையில்லை. வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளவும். லேசான அறிகுறிகள் இருப்பவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளலாம். அல்லது கரோனா பாதுகாப்பு மையத்தில் தங்கிக் கொள்ளலாம்.
தீவிர அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவார்கள்.
கரோனா பாதித்த அனைவருமே மருத்துவமனையில் அனுமதிக்கப்படத் தேவையில்லை. பாதிக்கப்பட்டவர்களில் 15 முதல் 25 சதவீதம் வரை மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள் நோயாளிகளுக்கான சிகிச்சை தேவைப்படும்.
சத்தான உணவுகளை உண்ணவும். ஓய்வு அவசியம். நல்ல காற்றோட்டமான, சூரிய ஒளிபடும் அறையில் இருக்கலாம்.
No comments:
Post a Comment