சர்ச்சைக்குரிய பதிவுகளுக்கு வாட்ஸ் அப் குழுவின் நிர்வாகி பொறுப்பல்ல - உயர்நீதிமன்றம்...
'வாட்ஸ் ஆப் குழுக்களில் பகிரப்படும் உள்ளடக்கத்திற்கு, அந்த குழுவின், 'அட்மின்' பொறுப்பாக முடியாது' என கூறிய மும்பை உயர் நீதிமன்றம், இந்த அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட, பாலியல் துன்புறுத்தல் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மஹாராஷ்டிராவின் கோண்டியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் கிஷோர் தரோன், 33. இவர் தன் நண்பர்கள் உள்ளிட்ட பலரை இணைத்து, வாட்ஸ் ஆப் குழு துவங்கினார். எச்சரிக்கை அந்த குழுவின், 'அட்மின்' எனப்படும், குழுவை நிர்வகிக்கும் பொறுப்பையும் ஏற்றார். குழுவில் புதிய உறுப்பினர்களை இணைப்பது மற்றும் விலக்குவது உள்ளிட்ட மாற்றங்களை அட்மின் மட்டுமே செய்ய முடியும்.
இந்நிலையில், 2016ல், அந்த வாட்ஸ் ஆப் குழுவில் இருந்த பெண் ஒருவரை, மற்றொரு ஆண் உறுப்பினர் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி பதிவிட்டார். 'அந்த ஆண் உறுப்பினரை குழுவில் இருந்து நீக்கியோ அல்லது எச்சரிக்கை விடுத்தோ, குழு நிர்வாகியான கிஷோர் நடவடிக்கை எடுக்கவில்லை' என, போலீசில் புகார் அளிக்கப்பட்டது.இதையடுத்து கிஷோர் மீது, பாலியல் துன்புறுத்தல் உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக, கோண்டியா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையில், கிஷோர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: வாட்ஸ் ஆப் குழுவில் இடம் பெறும் உள்ளடக்கத்தை மாற்றவோ, தணிக்கை செய்யவோ அதன் நிர்வாகிக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. புதிய உறுப்பினரை சேர்ப்பது, நீக்குவது உட்பட, சில குறிப்பிட்ட அதிகாரங்கள் மட்டுமே நிர்வாகிக்கு வழங்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், குழுவில் இடம்பெற்றுள்ள மற்ற உறுப்பினர்கள் பகிரும் உள்ளடக்கத்துக்கு, நிர்வாகியை பொறுப்பாக்க முடியாது. எனவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
FOR LATEST NEWS JOIN TELEGRAM BELOW
Join Telegram- CLICK HERE
*இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்⏩⏩
No comments:
Post a Comment