பழசை மறக்காத ஸ்டாலின்; ஆனந்த கண்ணீரில் நனைந்த விஜயகாந்த்!
நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. முதல்முறை எம்.எல்.ஏவாக உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம், தங்கள் கூட்டணியில் இல்லாத தேமுதிக தலைவர் விஜயகாந்தை உதயநிதி நேரில் சந்தித்துள்ளார். மரியாதை நிமித்தமாக நடந்த இந்த சந்திப்பு அனைவரையும் நெகிழ வைத்தது.
அப்போது விஜயகாந்த் குடும்பத்தினர் அன்புடன் உபசரித்து உதயநிதியிடம் பல்வேறு விஷயங்களை பேசியுள்ளனர். ஒரு காலத்தில் திமுகவையே பின்னுக்கு தள்ளி எதிர்க்கட்சி வரிசையில் கெத்தாக அமர்ந்தது தேமுதிக என்பதை மறந்துவிட முடியாது. ஆனால் 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் அக்கட்சி தேய்முகமாக இருக்கிறது. தேமுதிகவின் வாக்கு வங்கி அதள பாதாளத்திற்கு சென்றுவிட்டது.
இதற்கு கட்சி விஜயகாந்த் குடும்பத்தினர் கையில் சென்றதும், அவரது உடல்நலக் குறைவுமே காரணம் என்று சொல்லப்படுகிறது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியை உதறி தள்ளிய தேமுதிக, டிடிவி தினகரனின் அமமுக உடன் கைகோர்த்தது. ஆனால் தேர்தல் செலவுக்கான நிதி பெரிய பிரச்சினையாக வந்து நின்றது. ஒருகட்டத்தில் டிடிவி தினகரனும் கைவிரிக்க தேமுதிக வேட்பாளர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
இதனால் பெரிய அளவில் பிரச்சாரம் எதுவும் செய்ய முடியாமல் போனது. பிரேமலதா உட்பட போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழந்தது தான் மிச்சம். விஜயகாந்த் விரைவில் மீண்டும் வர வேண்டும். அவரிடம் இருந்து குடும்பத்தார் அரசியல் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதே தேமுதிகவினரின் விருப்பமாக உள்ளது.
இந்த சூழலில் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின்னர், தேமுதிக துணைப் பொதுச் செயலாளர் சுதீஷ், விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் ஆகியோர் சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்திற்கு சென்று ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது விஜயகாந்த் உடல்நிலை, பிரேமலதா பற்றி ஸ்டாலின் அக்கறையுடன் விசாரித்துள்ளார்.
No comments:
Post a Comment