வங்கக் கடலில் உருவாகும் யாஸ் புயல்: விரைவாக தொடங்கும் பருவமழை!
அரபிக்கடலில் உருவான அதி தீவிர புயலான டவ் தே மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட பல இடங்களில் கோரதாண்டவம் ஆடி கரையைக் கடந்தது. அடுத்த சில தினங்களுக்குள் வங்கக் கடலில் புதிய புயல் உருவாகிறது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் புயல் எச்சரிக்கை மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தென்மேற்கு பகுதியில் இருந்துகாற்று வீசத் தொடங்கி உள்ளதால், இந்த ஆண்டு சற்று முன்கூட்டியே தெற்கு அந்தமான் மற்றும்தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடலின் மேற்பரப்பு வெப்பநிலையும் சாதகமாக உள்ளதால் வடக்கு அந்தமான், கிழக்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகலாம். அதற்கடுத்த 72 மணி நேரத்தில் வலுவடைந்து புயலாக மாறக்கூடும். இப்புயலுக்கு 'யாஸ்' என பெயரிடப்பட்டுள்ளது. அது வடமேற்கு பகுதியை நோக்கி நகர்ந்து, வரும் 26ஆம் தேதி மாலை அல்லது 27ஆம்தேதி அதிகாலையில் ஒடிசா, மேற்குவங்க கடற்கரைக்கு இடையே கரையைக் கடக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், வடக்கு அந்தமான் கடல், கிழக்கு மத்திய வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாக உள்ளநிலையில், ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்றுள்ள மீனவர்களுக்கு செயற்கைக் கோள் தொலைபேசி, நேவிக், நேவ்டெக்ஸ் ஆகிய தொலைத் தொடர்பு கருவிகள் மூலம் தகவல் தெரிவித்து, அவர்கள் 23ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்புவதற்கான நடவடிக்கைகளை தமிழக மீன்வளத் துறை ஆணையர் மேற்கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment