ஒயிட் போர்டில் இலவசம்! மினி பேருந்தில் இவ்வளவு கட்டணமா? கொதிக்கும் பெண்கள்!
நகரப் பேருந்துகளில் பெண்கள், முதியவர்களுக்கு இலவசம் என அறிவித்து விட்டு, அதை ஈடுகட்டும் வகையில், மினி பேருந்துகளில் அதிகளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, தேர்தலில் அளித்த வாக்குறுதியின் படி, நகரப் பேருந்துகளில் பெண்கள், முதியவர்கள் இலவசமாக பயணிக்க, தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் உத்தவிட்டார்.
இதை அடுத்து, முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி பிறந்த நாளான கடந்த 3-ம் தேதி, திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவருடன் பயணிப்பவரும் இலவசமாக பயணிக்கலாம் என, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
கொரோனா இரண்டாவது அலை சற்று ஓய்ந்துள்ள நிலையில், தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அளித்துள்ளது. அதன்படி, இன்று முதல் 50 சதவீத இருக்கைகளுடன் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சாதாரணப் பேருந்துகளில் மட்டும் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் இயக்கப்பட்டு வரும் மினி பேருந்துகளில், அதிகளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பெண்கள், முதியவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மினி பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள், முதியோர்களுக்கு 13 ரூபாய் வரை டிக்கெட்டுக்கு பணம் கொடுத்து பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், அவர்கள் வேதனை அடைந்துள்ளனர். கோயம்பேடு மார்க்கெட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் இருந்து மார்க்கெட்டிற்கு வந்து செல்லும் பூ விற்பனை, பழ விற்பனை செய்யும் முதியோர்கள், இதனால் கடும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளார்கள்.
No comments:
Post a Comment