2 ஜிபி டேட்டா கார்டுகளை புதுப்பித்து வழங்குக! - ஸ்டாலினுக்கு இ.பி.எஸ்., வலியுறுத்தல்!
அ.தி.மு.க., அரசால் கொண்டு வரப்பட்ட கல்லூரி மாணவர்களுக்கான 2 ஜிபி டேட்டா கார்டுகளை புதுப்பித்தும், புதிய டேட்டா கார்டுகளை வழங்கும்படியும், தமிழக அரசை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக, முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அ.தி.மு.க., அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக, உயர்கல்வியில், தி.மு.க., ஆட்சியில், 2010 – 11ம் ஆண்டில் 32.9 விழுக்காடாக இருந்த உயர்கல்வி மாணவர்கள் சேர்க்கை, தற்போது 51.40 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
இந்தியாவிலேயே தமிழ்நாடு தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்து வருகிறது. பெரிய மாநிலங்களுடன் குறிப்பாக கேரளாவுடன் போட்டி போட்டு தமிழகம் உயர் கல்வியில் பெரும் வளர்ச்சியைப் பற்றி இந்தியாவிலேயே தொடர்ந்து முதல் இடத்தில் இருப்பதற்கு அ.தி.மு.க., 30 ஆண்டுகால ஆட்சியின் மாட்சியே காரணம்.
கடந்த ஆண்டு கொரோனா தொற்றின் காரணமாக தமிழக கல்லூரிகள் வகுப்புகளை நடத்த முடியாத சூழலில் மாணவர்களின் நலனுக்காக கல்வி நிறுவனங்கள் இணையவழி வகுப்புகளை நடத்தின. இதில் பல மாணவ மாணவிகளால் பங்கேற்க முடியவில்லை. முக்கியமாக அனைத்து மாணாக்கர்கள் அல்லது அவர்களது பெற்றோர்கள் ஆண்ட்ராய்டு கைப்பேசியை அல்லது அரசு வழங்கிய மடிக் கணினி வைத்திருந்தாலும் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள டேட்டா கார்டு வாங்க இயலாத நிலையில் இருந்தனர்.
எனவே, அம்மாவின் அரசு கலை அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, பொறியியல் கல்லூரி மற்றும் கல்வி உதவித்தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயின்ற சுமார் 9 லட்சத்து 70 ஆயிரம் மாணவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை நான்கு மாதங்களுக்கு, நாளொன்றுக்கு, 2 ஜிபி டேட்டா உடன் கூடிய தரவு அட்டைகளை வழங்க உத்தரவிட்டது. தமிழக அரசின் எல்காட் நிறுவனத்தின் மூலமாக விலையில்லா தரவு அட்டைகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு அவர்களின் சிறந்த முறையில் ஆன்லைன் வகுப்பில் பயின்றார்கள்.
No comments:
Post a Comment