சாதிவாரி, மொழிவாரிக் கணக்கெடுப்பு: சீமான் வலியுறுத்தல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, July 28, 2021

சாதிவாரி, மொழிவாரிக் கணக்கெடுப்பு: சீமான் வலியுறுத்தல்!

சாதிவாரி, மொழிவாரிக் கணக்கெடுப்பு: சீமான் வலியுறுத்தல்!

சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தி அனைத்து சமூகங்களுக்குமான வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தைச் சட்டப்பூர்வமாக நிலைபெறச்செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பெருத்த தமிழ்ச்சமூகத்திற்கு 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டை அளித்து உத்தரவிட்டிருக்கும் தமிழக அரசின் முடிவு சரியான முன்நகர்வாகும். ஆண்டாண்டு காலமாகப் பிறப்பின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டு, ஒடுக்கப்பட்ட தமிழ்ச்சமூகங்களுக்கான பிரதிநிதித்துவத்தையும், வாய்ப்பையும் அச்சமூகத்தையே அளவீடாகக் கொண்டு கல்வி, வேலைவாய்ப்புகளில் உறுதிப்படுத்துவதே சமூக நயன்மையாகும். அதற்கேற்ப, தமிழகத்தில் நிலைப்படுத்தப்பட்டுள்ள 69 விழுக்காடு இடஒதுக்கீட்டில் 10.5 ஒதுக்கீட்டை மிகவும் பிற்படுத்தப்பட்ட தமிழ்ச்சமூகத்திற்கு உறுதிப்படுத்தி அரசாணை வெளியிட்டிருப்பது நீண்டநெடியக் காலமாக அக்கோரிக்கைக்காகப் போராடிய மக்களின் மேம்பாட்டுக்குப் பெரிதும் உதவுமென நம்புகிறேன்.



அதேசமயம், இத்தகைய இடஒதுக்கீட்டுக்கு எத்தகைய சட்டச்சிக்கலும் ஏற்படாதிருக்க, சாதிவாரிக்கணக்கெடுப்பை உடனடியாக நடத்தி, சான்றுகளோடும், தரவுகளோடும் அதனை நிலைபெறச் செய்ய வேண்டுமெனவும், அனைத்து தமிழ்ச்சமூகங்களுக்குமான இடஒதுக்கீட்டை மக்கள்தொகைக்கேற்ப பகிர்ந்தளிக்க முன்வர வேண்டுமெனவும் முன்வைக்கப்படும் கோரிக்கையின் நியாயத்தை பரிசீலிக்க வேண்டியதும் பேரவசியமாகிறது. 5 பேருக்கு 50 பேருக்கான உணவைத் தருவதும், 50 பேருக்கு 5 பேருக்கான உணவைத் தருவதும் ஏற்கத்தக்கதுமல்ல; சமூக நயன்மையுமல்ல! அத்தகைய அசமத்துவமானப் போக்கு உருவாகமலிருக்க, சாதிவாரிக்கணக்கெடுப்பின் மூலம் சமூகங்களின் மக்கள்தொகையைக் கண்டறிந்து, எண்ணிக்கை விகிதத்திற்கேற்ப அவர்களுக்கான விகிதாச்சாரத்தை வழங்குவதே தகுந்த சட்ட நடவடிக்கையாகும்.சாதிவாரிக்கணக்கெடுப்பின் மூலம் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை நிலைநிறுத்த வேண்டும் என்பதைத்தான் மருத்துவர் ஐயா ராமதாசும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார். திமுகவும் அதனைத் தேர்தல் வாக்குறுதியாக அளித்திருந்தது. ஆகவே, அதனை விரைந்து சாத்தியப்படுத்தி வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தைச் சரிவர நிர்மாணிப்பது உகந்த செயலாகும்.

ஆகவே, சாதிவாரிக்கணக்கெடுப்பை உடனடியாக நடத்தி 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டை சட்டப்பூர்வமாக உறுதி செய்வதோடு, எல்லா சமூகங்களுக்குமான பிரதிநிதித்துவத்தை மக்கள்தொகைக்கேற்ப சரிசமமாகப் பகிர்ந்தளிக்க முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன். இத்தோடு, மொழிவாரிக் கணக்கெடுப்பையும் நடத்தி அதன் முடிவை முன்வைக்க வேண்டுமெனக் கோருகிறேன்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad