மோடியிடம் பேசியது என்ன? கப்-சிப் ஓபிஎஸ், நழுவிய ஈபிஎஸ்!
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று திடீரென எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, டெல்லி சென்றார். இது அரசியல் அரங்கில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், இரவு இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கோவையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். ஓபிஎஸ் உடன் மனோஜ் பாண்டியன் சென்ற நிலையில், ஈபிஎஸ் உடன் முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டவர்கள் கிளம்பி சென்றனர்.
அதிமுகவின் அடுத்த அவைத்தலைவர், உட்கட்சித் தேர்தல், இரட்டை தலைமை, மத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடமளிக்காதது, பொதுக்குழு கூட்டம், சசிகலா ஆடியோ விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் அதிமுகவை சூழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், இவர்களது பயணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
டெல்லி சென்ற ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவரும் பிரதமர் மோடியை நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்தனர். அதன்பின்னர், செய்தியாளர்களை இருவரும் கூட்டாக சந்தித்தனர். அப்போது ஓ.பன்னீர்செல்வம் எதுவும் பேசவில்லை. எடப்பாடி பழனிசாமி மட்டுமே பேசினார்.
“கடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் எங்கள் கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தமைக்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தோம். மேலும் தமிழகத்துக்கு அதிக தடுப்பூசி ஒதுக்க வேண்டும் என்றும், கர்நாடகத்தில் மேகதாது அணை கட்டினால் தமிழகத்தில் டெல்டா பாலைவனம் ஆகிவிடும் என்றும் எடுத்துக் கூறினோம். காவிரி கோதாவரி இணைப்பை பற்றி பேசினோம். இவ்வாறு தமிழகத்தின் பிரச்சினைகள் பற்றித்தான் பேசினோம்” என்றார் செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி.
அப்போது அதிமுக கட்சிப் பிரச்சினை ஒற்றைத் தலைமை பற்றி பேசினீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு வணக்கம் என்று கையெடுத்து கும்பிட்டுவிட்டு எடப்பாடி பழனிசாமி உள்பட அனைவருமே நழுவி விட்டனர். டெல்லி சென்றுள்ள அதிமுக குழு உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்திக்கவுள்ளதாக தெரிகிறது.
No comments:
Post a Comment