பயிர் காப்பீட்டுத் திட்டம்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, July 29, 2021

பயிர் காப்பீட்டுத் திட்டம்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

பயிர் காப்பீட்டுத் திட்டம்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

பிரதமர் மோடி, ஒன்றிய வேளாண்மைத்துறை அமைச்சர் ஆகியோருக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் காப்பீட்டுக் கட்டணத்தில் ஒன்றிய அரசின் பங்களிப்பினைக் குறைக்கும் வகையில், உயர்ந்தபட்ச விகிதத்தை நிர்ணயிக்கும் முறையை நீக்கி, மாநிலத்தில் உள்ள விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு, முன்பு இருந்தபடி 49:49:2 என்ற விகிதத்தில் காப்பீட்டுக் கட்டணப் பங்கினைத் திரும்ப மாற்றியமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
வேளாண் துறையில் விவசாயிகளின் பொருளாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில், தமிழகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் சாகுபடி பரப்பளவினை அதிகரித்தல், ஒரு முறைக்கும் மேல் சாகுபடி செய்யும் பரப்பினை இரட்டிப்பாக்குதல் மற்றும் உணவு தானியங்களின் உற்பத்தித் திறனை அதிகரித்தல் ஆகிய மூன்று தொலைநோக்குப் பார்வையுடன் வேளாண்மைக்கென தனி வரவு-செலவுத் திட்ட அறிக்கையை நடப்பாண்டு முதல் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

காப்பீட்டுக் கட்டண மானியத்தில் ஒன்றிய அரசின் பங்கினை 49 விழுக்காட்டிலிருந்து, பாசனப் பகுதிகளுக்கு 25 விழுக்காடாகவும், மானாவாரிப் பகுதிகளுக்கு 30 விழுக்காடாகவும் குறைத்து நிர்ணயித்திருப்பதால், 2016-2017-ல் 566 கோடி ரூபாயாக இருந்த மாநில அரசின் பங்கு, 2020-2021இல் 1,918 கோடி ரூபாயாக, அதாவது 239 விழுக்காடு அளவிற்கு அதிகரித்துள்ளது என்றும் ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.



கொரோனா பெருந்தொற்று உள்ள இந்தக் காலக்கட்டத்தில் மாநில அரசின் நிதிச்சுமை அதிகரித்து வரும் நிலையில், இத்திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்துவது தமிழ்நாடு அரசுக்கு சவாலாகவும், கடினமாகவும் உள்ளது என்றும், ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை இத்திட்டத்தின் நோக்கத்தையே முடக்கியுள்ளதாகவும் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் ஒன்றிய அரசின் பங்கீட்டினைக் குறைக்கும் வகையில், உயர்ந்தபட்ச விகிதத்தை நிர்ணயிக்கும் முறையை நீக்கி, மாநிலத்தில் உள்ள விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு, காப்பீட்டுக் கட்டணத்தில் ஒன்றிய அரசு, மாநில அரசு மற்றும் விவசாயிகளின் பங்கினை முறையே 49:49:2 என்ற விகிதத்தில் உடனடியாக மாற்றியமைக்க வேண்டுமென்று முதல்வர் ஸ்டாலின் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad