ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, July 30, 2021

ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தம்!

ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தம்!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை கடந்த பிப்ரவரி மாதம் தீவிரமடைந்தது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏராளமான மரணங்கள் ஏற்பட்டன. இதையடுத்து, தமிழக அரசால் மூடப்பட்ட, தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் தாமிர ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை திறக்க உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் தமிழக அரசு அனுமதி வழங்கியது.

இதனை தொடர்ந்து, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தின் முதலாவது அலகில் மருத்துவ பயன்பாட்டுக்கான திரவ ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது. அங்கு உற்பத்தி செய்யப்பட்ட திரவ ஆக்சிஜன் டேங்கர் லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வந்தன.

முன்னதாக, ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள அலகுகளின் மூலம் ஆக்சிஜன் தயாரிக்க முடியும் என்று கூறி அதற்கு அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ஜூலை 31ம் தேதி வரை ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பளித்தது.

நீதிமன்றம் வழங்கிய காலக்கெடு நாளையுடன் நிறைவடைய உள்ளதற்கிடையே, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய தொடர்ந்து அனுமதி வழங்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, தமிழகத்தில் தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாததால், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க தேவையில்லை என தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடரும் என கூறி வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு நீதிமன்றம் தள்ளி வைத்தது. இந்த நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவின் படி நாளையுடன் அனுமதி முடிவடையவுள்ளதால், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad