மீண்டும் முழு ஊரடங்கு: மத்திய அரசு எச்சரிக்கை
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றாவிட்டால், மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என, மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. மாநில அரசுகளின் முழு ஊரடங்கு போன்ற நடவடிக்கைகளால், கொரோனா பரவல் குறைந்துள்ளது. இதை அடுத்து, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை மாநில அரசுகள் அறிவித்துள்ளன.
தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத மக்கள்
பல்வேறு மாநிலங்களில், சுற்றுலாத் தலங்கள் மற்றும் மலைப் பிரதேசங்களுக்கு செல்ல, சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும், சந்தைகள், சுற்றுலாத் தலங்கள் உள்ளிட்ட மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடங்களில், பொது மக்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இருக்கின்றனர். இதனால், கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மீண்டும் முழு ஊரடங்கு
இந்நிலையில், நாட்டின் கொரோனா நிலவரம் குறித்து, டெல்லியில், மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாட்டில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்திற்கு கீழ் குறைந்துள்ளது. மஹாராஷ்டிரா, தமிழகம், ஒடிசா, ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், திரிபுரா உள்ளிட்ட 10 மாநிலங்களில் மட்டுமே, 10 சதவீதத்திற்கும் அதிகமான பாதிப்பு பதிவாகி வருகிறது.
இன்னும் பல பகுதிகளில் கொரோனா இரண்டாவது அலை குறையவில்லை. மலைப் பிரதேசங்களுக்கு செல்லும் மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றுவதில்லை. இதே நிலை தொடர்ந்தால், தளர்வுகள் திரும்ப பெறப்படும். நாடு மீண்டும் முழு ஊரடங்கை சந்திக்க நேரிடும்.நாட்டில் 24 சதவீத பேர் முகக் கவசம் அணிவது இல்லை. 45 சதவீத பேர் முறையாக முகக்கவசம் அணிவதில்லை. 63 சதவீத பேர் தனிநபர் இடைவெளியை பின்பற்றுவதில்லை. 25 சதவீத பேர் பயணங்களின் போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது இல்லை.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
இதற்கிடையே, கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 73 மாவட்ட நிர்வாகங்களுக்கு கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது.
No comments:
Post a Comment