தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு; உடனடியாக செய்ய வேண்டியது இதுதான்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, July 23, 2021

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு; உடனடியாக செய்ய வேண்டியது இதுதான்!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு; உடனடியாக செய்ய வேண்டியது இதுதான்!


தமிழகத்தில் கடந்த ஓராண்டிற்கும் மேலாக பள்ளிகள் மூடியே இருக்கின்றன. கொரோனா வைரஸ் பாதிப்பு தீயாய் பரவிய நிலையில் முதல் அலை, இரண்டாவது அலை என விஸ்வரூபம் எடுத்தது. இதன் காரணமாக ஆண்டு இறுதித் தேர்வு கூட நடத்த முடியாமல் ரத்து செய்யும் நிலை உருவானது. அதன்பிறகு ஆல் பாஸ், மதிப்பெண்களை கணக்கிட வழிகாட்டுதல்கள் என காலம் கடந்தது. தற்போது புதிய கல்வியாண்டு தொடங்கிய போதிலும் பள்ளிகளை திறக்க ஏதுவான சூழல் உருவாகவில்லை. இந்த விஷயத்தில் மாநில அரசு இதுவரை எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை என்றே தெரிகிறது.

அதிகரிக்கும் குழந்தை தொழிலாளர்கள்

இவ்வாறு தொடர்ச்சியாக பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. ஒருபுறம் ஸ்மார்ட்போன், இணைய வசதி என போராடிக் கொண்டிருந்தாலும், மறுபுறம் சத்தமே இல்லாமல் தங்கள் பிள்ளைகளை வேலைக்கு அனுப்பி வைத்து விடுகின்றனர். இதனால் குழந்தை தொழிலாளர்கள் பெரிதும் அதிகரித்துள்ளனர்.

பாடங்கள் புரியவில்லை

இதுதொடர்பாக தமிழக அறிவியல் இயக்கம் மாநிலம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்களைக் கொண்டு நடத்திய ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இணைய வழிக் கல்வியில் 49 சதவீதம் மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். 41 சதவீதம் மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி மூலம் படித்தாலும் பாடங்கள் புரியவில்லை என்கின்றனர். எனவே இத்தகைய கல்வி முறையை மறுஆய்வு செய்து மேம்படுத்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு இருக்கிறது.


கல்வியை கைவிடும் மாணவர்கள்

தமிழகத்தில் 14 வயதுக்கு உட்பட்ட 13 சதவீதம் பேர் குடும்ப சூழல் காரணமாக குழந்தை தொழிலாளர்களாக மாறியுள்ளனர். 10 சதவீதம் மாணவர்கள் மேல்நிலை வகுப்புகளுக்கு செல்லாமல் கல்வியை கைவிட்டுள்ளனர். தனியார் பள்ளிகளில் கட்டணம் கட்ட முடியாமல் 7 சதவீத மாணவர்கள் விலகி உள்ளனர். அதேசமயம் அரசு பள்ளிகளில் 5 சதவீதம் பேர் கூடுதலாக சேர்ந்துள்ளனர். இந்த மாணவர்களை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளும் வகையில் அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட வேண்டியது அவசியமாகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தலைவர் தினகரன் உள்ளிட்டோர் அளித்த பேட்டியில், பள்ளிகளை மீண்டும் திறந்ததும் உடனடியாக பாடங்களை நடத்த வேண்டாம். மாணவர்கள், ஆசிரியர்கள் மனம் விட்டு பழகும் வகையில் மகிழ்ச்சியான விளையாட்டுகளுடன் தொடங்க வேண்டும். கொரோனாவால் 1.1 சதவீத மாணவர்கள் பெற்றோரை இழந்துள்ளனர். இவர்கள் மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அரசு உறுதுணையாக விளங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

No comments:

Post a Comment

Post Top Ad