மனம் மாறுகிறாரா எடப்பாடி? சசிகலாவுக்கு டெல்லியிலிருந்து கிரீன் சிக்னல்? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, July 26, 2021

மனம் மாறுகிறாரா எடப்பாடி? சசிகலாவுக்கு டெல்லியிலிருந்து கிரீன் சிக்னல்?

மனம் மாறுகிறாரா எடப்பாடி? சசிகலாவுக்கு டெல்லியிலிருந்து கிரீன் சிக்னல்?

ஜெயலலிதா மறைந்ததிலிருந்தே அதிமுகவுக்குள் புதுப்புது புயல்கள் உருவாகிக்கொண்டே உள்ளன. சுமார் ஐந்து ஆண்டுகளாக எத்தனையோ பஞ்சாயத்துகளை அதிமுக சந்தித்தபடியே உள்ளது.
இன்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை ஒருங்கிணைப்பாளரும் டெல்லியில் முகாமிட்டு பிரதமர் மோடியையும், பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவையும் சந்திக்கின்றனர். எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்குமிடையே பனிப்போர் நிலவி வரும் நிலையில் சசிகலாவின் ஆடியோ வெளியீடு, தொலைக்காட்சி பேட்டிகள் ஆகியவை அதிமுகவுக்குள் மேலும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

தேர்தலுக்கு முன்பே சசிகலாவை கட்சிக்கு கொண்டு வர வேண்டும், குறைந்தபட்சம் அமமுகவை கூட்டணிக்குள்ளாவது கொண்டு வர வேண்டும் என ஓபிஎஸ் காய் நகர்த்தி வந்தார். அமித் ஷா மூலம் பேசியும் கூட எடப்பாடி பழனிசாமி காட்டிய பிடிவாதத்தால் ஓபிஎஸ்ஸின் முயற்சி பலனளிக்கவில்லை.

எடப்பாடி பழனிசாமி தேர்தலுக்கு முன்னர், தான் முதல்வராக இருந்த போது சசிகலா விஷயத்தை அணுகியதற்கும் இப்போது எதிர்கட்சித் தலைவராக இருக்கும் போது அணுகுவதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளதாக அதிமுகவிலேயே பேச்சு எழுகிறது.

“சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்திய போதும் சில மாவட்டச் செயலாளர்களே அதை நிறைவேற்றினர். பலரும் அதற்கு உடன்படாதது எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு ஷாக்கை ஏற்படுத்தியிருக்கிறது. போதாத குறைக்கு அதிமுகவை மறைமுகமாக கைப்பற்ற பாஜக திட்டமிடுவதாக அரசியல் நோக்கர்கள் கணித்து வருகின்றனர்.

தமிழக அரசியலில் திமுகவுக்கும் பாஜகவுக்கும் தான் போட்டி என பாஜக பேசி வருவதும் எடப்பாடி பழனிசாமியை சங்கடப்படுத்தியுள்ளது. திமுக ஒரு பக்கம் அதிமுக முன்னாள் அமைச்சர்களை குறி வைத்து ரெய்டு நடத்தி வருகிறது. முக்கிய பிரமுகர்களை தங்கள் கட்சிக்கு கவர்ந்தபடி உள்ளது.இதனால் அனைத்து திசைகளிலிருந்தும் வரும் ஆபத்தை எதிர்கொள்ள முடியாமல் எடப்பாடி பழனிசாமி திணறிவருகிறார். இந்த சூழலில் சசிகலா வருகைக்கு முட்டுக்கட்டை போடமாட்டார்” என்கிறார்கள் சசிகலா ஆதரவாளர்கள். இதனால் டெல்லி சென்றுள்ள ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் பாஜக மேல்மட்டத்தில் சசிகலா விவகாரம் குறித்து பேசி ஒரு முடிவுக்கு வருவார்கள் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad