பிரதமர் மோடியுடன் மே.வங்க முதல்வர் மம்தா சந்திப்பு! - இருவரும் பேசியது என்ன? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 27, 2021

பிரதமர் மோடியுடன் மே.வங்க முதல்வர் மம்தா சந்திப்பு! - இருவரும் பேசியது என்ன?

பிரதமர் மோடியுடன் மே.வங்க முதல்வர் மம்தா சந்திப்பு! - இருவரும் பேசியது என்ன?

டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடியை மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்தித்துப் பேசினார்.

நடந்து முடிந்த மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், முதலமைச்சருமான மம்தா பானர்ஜி தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளார்.

தேர்தல் வெற்றிக்கு பிறகு, முதன்முறையாக, பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைநகர் டெல்லிக்கு மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் இன்று மாலை, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்தித்துப் பேசினார்.

அப்போது, மேற்கு வங்க மாநிலத்திற்கு கூடுதல் தடுப்பூசி வழங்க வேண்டும்; மேற்கு வங்க மாநிலத்தின் நிதி நெருக்கடி சூழலை போக்கும் வண்ணம் மத்திய அரசு நிலுவையில் உள்ள நிதியை விடுவிக்க வேண்டும்; புயல் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை, முதலமைச்சர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரதமருடான சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மரியாதை நிமித்தமாக பிரதமரை சந்தித்ததாகவும், மாநில நலன் சார்ந்த பிரச்னைகள் குறித்து பிரதமரிடம் பேசியதாகவும், பெகாசஸ் விவகாரம் தொடர்பாக, அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு பிரதமர் அழைப்பு விடுக்க வேண்டும் என்றும், இது குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்திக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின் போது, பா.ஜ.க. - பிரதமர் நரேந்திர மோடி - அமித் ஷா ஆகியோரை முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு பிறகு இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மேலும், பெகாசஸ் மென் பொருள் விவகாரத்திலும் மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடியை முதலமைச்சர் மம்தா கடுமையாக விமர்சித்திருந்தார்.

முன்னதாக, காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள் கமல்நாத், ஆனந்த் சர்மா உள்ளிட்டோரை மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்தித்துப் பேசினார். இதற்கிடையே, டெல்லியில், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.,க்களை நாளை அவர் சந்தித்துப் பேச உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad