"நாம் சோர்வடையலாம்; வைரஸ் சோர்வடையாது!" - மத்திய அரசு எச்சரிக்கை - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 27, 2021

"நாம் சோர்வடையலாம்; வைரஸ் சோர்வடையாது!" - மத்திய அரசு எச்சரிக்கை

"நாம் சோர்வடையலாம்; வைரஸ் சோர்வடையாது!" - மத்திய அரசு எச்சரிக்கை

கேரளா, மணிப்பூர், மேகாலயா உள்ளிட்ட 7 மாநிலங்களில் உள்ள 22 மாவட்டங்களில், கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டின் கொரோனா நிலவரம் குறித்து, டெல்லியில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சக அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மத்திய சுகாதாரத் துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் பேசியதாவது:

கேரளாவில் 7 மாவட்டங்கள், மணிப்பூரில் 5 மாவட்டங்கள், மேகாலயாவில், 3 மாவட்டங்கள் என, மொத்தம் 7 மாநிலங்களில் உள்ள 22 மாவட்டங்களில், கடந்த 4 வாரங்களாக, கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது கவலைக்குரியது.

நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், சில மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருவது கவலையை அளிக்கிறது. கொரோனா தொற்று அதிகமுள்ள மாநில அரசுகளிடம் தொடர்ந்து பேசி வருகிறோம். தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி அவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து, நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) வி.கே. பால் கூறியதாவது:
கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போர் நிறைவடைய இன்னும் வெகு தொலைவு இருக்கிறது. நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலக்கட்டம் இது. நாம் சோர்வடைந்தாலும், கொரோனா வைரஸ் சோர்வடைய போவதில்லை.

எந்தவொரு தடுப்பூசிக்கும் 100 சதவீதம் உத்தரவாதம் கொடுக்க முடியாது. ஒவ்வொரு தடுப்பூசியும் அதனதன் வீரியத்திற்கேற்ப மக்களை உயிரிழப்பிலிருந்து காப்பாற்றும். உண்மை நிலவரம் என்னவென்றால் வைரஸ்கள் உருமாறிக் கொண்டிருக்கின்றன. இது சிக்கலானது. பெரிய விழாக்களை கொண்டாடும் நேரம் இதுவல்ல. தேவையற்ற பயணத்தை தவிருங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad