ரூ.76.65 கோடி சொத்து குவிப்பு புகார்: சிக்குவாரா முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி!
அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அண்மையில் சோதனை நடத்தினர். ஊழலுக்கு எதிரான செயல்பாடுகளை மேற்கொள்ளும் அறப்போர் இயக்கம் அளித்த புகார் அவர் மீதான ரெய்டுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வருமானத்திற்கு அதிகமாக ரூ.76.65 கோடி சொத்துக்களை குவித்துள்ளதாக அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் அளித்துள்ளது.
இது தொடர்பான புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: “முன்னாள்
அமைச்சர் கே.சி.வீரமணி 2011 முதல் 2021 வரை பொது ஊழியராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்த கால கட்டத்தில், தன் வருமானத்திற்கு அதிகமாக ரூ 76.65 கோடி சொத்துக்களை குவித்துள்ளார் என்று அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் தெரிவித்துள்ளது. இதற்கான ஆதாரங்களையும் அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்பு துறையில் கொடுத்துள்ளது.
கே.சி.வீரமணி 2011 முதல் 2021 வரை ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். மேலும் அவர் 2016 முதல் 2021 வரை வணிகவரித்துறை மற்றும் நிலப்பத்திரப்பதிவு அமைச்சராக இருந்தார்
அதன் முன் 2013 முதல் 2016 வரை கல்வித்துறை, விளையாட்டு துறை தமிழ் மொழி மற்றும் கலாச்சாரம் துறை மற்றும் சுகாதாரத்துறை போன்ற துறைகளின் அமைச்சராக இருந்துள்ளார்.
2011ஆம் ஆண்டில் கே.சி.வீரமணி அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் நிகர சொத்து ரூ. 7.48 கோடி என்று தெரிவித்திருந்தார். ஆனால் 2011 முதல் 2021 வரை அவர் மற்றும் அவர் குடும்பத்தினரும் சேர்த்த சொத்துகளின் மதிப்பு 91.2 கோடி ரூபாயாகும். 2011 முதல் 2021 வரை அவர் வாங்கிய கடன்களை கழித்தால், அவர் சேர்த்த நிகர சொத்து ரூ 83.65 கோடி ஆகும். மேலும் இந்த 10 ஆண்டு காலத்தில் அவரது வருமானம் மூலம் சேமிப்பு செய்தது அதிகபட்சமாக ரூ 7 கோடி. எனவே அவர் கடந்த பத்து ஆண்டுகளில் அவர் பெயரிலும் குடும்பத்தார் பெயரிலும் வருமானத்திற்கு அதிகமாக சேர்த்த சொத்து ரூ 76.65 கோடி ஆகும்.
இந்த சொத்தை கணக்கிடும்போது பெரும்பாலும் அவர் சொத்தை வாங்கிய விலையாக பதிவுத்துறையில் தெரிவித்திருந்தையே கணக்கு செய்துள்ளோம். பெரும்பாலும் இவை அப்போதைய அரசு நிர்ணயித்த (Guideline) மதிப்பை விட மிகக் குறைவாக காட்டப்பட்டுள்ளது. இவரே பதிவுத்துறை அமைச்சராகவும் இருந்து இவர் துறையிலேயே அதிகாரிகளுடன் சேர்ந்து விலையை குறைத்து மதிப்பீடு செய்து மோசடியும் செய்ததும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எனவே விசாரணையில் இவரது உண்மையான வாங்கிய விலையை கணக்கீடு செய்தால் இங்கு சொல்லப்பட்ட தொகையை விட அது பல கோடி அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. அது அனைத்தையும்
லஞ்ச ஒழிப்பு துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணையின் பொழுது கணக்கிட வேண்டும்.
No comments:
Post a Comment