தமிழகப் பள்ளி மாணவர்கள் ஹேப்பி; அமைச்சரின் சர்ப்ரைஸ் அறிவிப்புகள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, August 26, 2021

தமிழகப் பள்ளி மாணவர்கள் ஹேப்பி; அமைச்சரின் சர்ப்ரைஸ் அறிவிப்புகள்!

தமிழகப் பள்ளி மாணவர்கள் ஹேப்பி; அமைச்சரின் சர்ப்ரைஸ் அறிவிப்புகள்!

தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் பள்ளிக் கல்வித்துறை மற்றும் உயர் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது பல்வேறு புதிய அறிவிப்புகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். அதில், ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை விதிகளின்படி புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கவும், தரம் உயர்த்தவும் படுகின்றன. 2020-21ஆம் கல்வியாண்டில் 26 புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன.

பள்ளிகள் தரம் உயர்வு

10 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 36 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 46 உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த கல்வியாண்டில் மலைப்பாங்கான மற்றும் தொலைதூரப் பகுதிகளில் 12 தொடக்கப் பள்ளிகள் புதிதாகத் தொடங்கப்படும். அதுமட்டுமின்றி 22 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட உள்ளன என்று தெரிவித்தார்.

மாணவர் சேர்க்கை

மேலும் 100 சதவீத மாணவர் சேர்க்கையை உறுதி செய்வதற்கும், பள்ளிகளில் மாணாக்கரைத் தொடர்ந்து தக்க வைப்பதற்கும் இடைநிற்றலை முற்றிலும் தடுப்பதற்கும் பள்ளி செல்லாக் குழந்தைகள், பள்ளியில் சேராத குழந்தைகள், புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள், தெருவோரச் சிறார்கள், நகர்ப்புறங்களில் உள்ள வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகள், பெரியோர் பாதுகாப்பின்றி வாழும் குழந்தைகளுக்கு என சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இடைநிற்றலை தவிர்த்தல்

ஒவ்வொரு கல்வியாண்டின் தொடக்கத்திலும் வீடு, வீடாகச் சென்று கணக்கெடுப்புப் பணி நடத்தப்பட்டு, பள்ளி செல்லாக் குழந்தைகள் கண்டறியப்பட்டு அவர்தம் வயதுக்கேற்ற வகுப்பில் சேர்க்கப்பட்டு தேவையான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2020-21ஆம் கல்வியாண்டில் கண்டறியப்பட்ட 33,591 பள்ளி செல்லாக் குழந்தைகளில் 33,335 பேர் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். கொரோனா பெருந்தொற்றின் காரணமாக முறையான பள்ளிக் கல்வியிலிருந்து சில குழந்தைகள் வெளியேறி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இதற்காக கடந்த 10ஆம் தேதியில் இருந்து வரும் 31ஆம் தேதி வரை களப்பணிக் குழுவினர் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் அனைத்து குடியிருப்புகளிலும் வீடு வீடாக கைப்பேசி செயலியின் உதவியுடன் பதிவு செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அடையாளம் காணப்படும் மாணாக்கரின் புவியியல் இடம் உட்பட அனைத்துத் தகவல்களும் செயலி வழியே பெறப்படுகின்றன. இந்த குழந்தைகளை உடனடியாக பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன் செயல்பாடுகளுக்காக 2021-22ஆம் கல்வியாண்டில் 9 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad