வாய் தவறி பேசிட்டேன்: மீரா மிதுன் அந்தர் பல்டி!
நடிகை மீரா மிதுன் பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசி சில தினங்களுக்கு முன்னர் வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அந்த வீடியோவுக்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. இதையடுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளா் வன்னி அரசு உள்பட பல்வேறு தரப்பினர் மீரா மிதுன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம்,
கலகத்தைத் தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த சைபர் க்ரைம் போலீசார், கடந்த 11ஆம் தேதி மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராகும்படி மீரா மீதுனுக்கு சம்மன் அனுப்பினர். ஆனால், மீரா மிதுன் தலைமறைவாகி விட்டார். தொடர்ந்து அவரை தேடி வந்த போலீசார், கேரளாவில் வைத்து மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோரை 14ஆம் தேதி கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.
இதையடுத்து, காவல் நிலையத்தில்
அவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்கள் இருவரையும் வருகிற 27ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே, தங்களுக்கு
ஜாமீன் வழங்கக் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவர்கள் இருவரும் மனுதாக்கல் செய்திருந்தனர்.
அதில், தன்னைப் பற்றி அவதூறாக செய்தி பரப்பியதால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, கண்டனம் தெரிவிக்கும் வகையில் பேசியபோது, வாய் தவறி பட்டியலின சமுதாயம் பற்றி பேசிவிட்டதாகவும், தான் பேசியது தவறு என தெரிந்ததும், தவறு என குறிப்பிட்டதாகவும் மீரா மிதுன் தெரிவித்துள்ளார். மேலும், படங்களில் நடிப்பதற்கு கால்ஷீட் கொடுத்துள்ள நிலையில், சிறையில்
அடைக்கப்பட்டுள்ளதால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது, எனவே தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
இந்த மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, அவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று விசிக துணைப் பொது செயலாளர் வன்னியரசு தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. இது தொடர்பாக இடையீட்டு மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 23ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
No comments:
Post a Comment