சசிகலா திடீர் மவுனம்; சுற்றுப்பயணம் கிடையாதா, என்ன காரணம்?
அதிமுகவை மீண்டும் கைப்பற்றுவார் என்று சசிகலா மீது அவரது ஆதரவாளர்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கின்றனர். ஆனால் அதற்கான சூழல் தொடர்ந்து தள்ளிபோடப்பட்டு வருகிறது. இதன் பின்னணியில் பல்வேறு அரசியல் கணக்குகள்
இருப்பதாக சொல்லப்படுகிறது. கடந்த சில வாரங்களாக தனது ஆதரவாளர்களுடன் தொலைபேசியில் பேசி தொடர்ச்சியாக ஆடியோக்களை வெளியிட்டு வந்தார். அதில், தொண்டர்கள் ஆதரவு இருந்தால் தன்னால் சாதிக்க முடியும்.
மீண்டும் அதிமுகவிற்கு தலைமை பொறுப்பேற்பேன். ஜெயலலிதாவை போன்று திறமையாக நிர்வாகம் செய்வேன். எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் என்றெல்லாம் பேசினார். இந்த விஷயம் அதிமுக தலைமைக்கு கடும் நெருக்கடியை
அளிக்கத் தொடங்கியது. இந்நிலையில் தான் முக்கியத்துவம் வாய்ந்த டெல்லி பயணம் நடைபெற்றது. அந்தப் பயணத்தில் இரண்டு முக்கிய கோரிக்கைகளை பாஜக தலைமையிடம் அதிமுக முன்வைத்ததாக சொல்லப்படுகிறது.
ஒன்று சசிகலா, மற்றொன்று ஸ்டாலின். அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மீதான ரெய்டு நடவடிக்கைகளில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டதாகவும், சசிகலாவின் வருகைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அதில் சசிகலா விஷயத்தில் பாஜக தலைமை கச்சிதமாக காய்களை நகர்த்தி வருவதன் விளைவே பெங்களூரு வழக்கின் நெருக்கடி என்கின்றனர் அரசியல் விவரம் தெரிந்தவர்கள்.
No comments:
Post a Comment