இன்று முதல் இரவுநேர ஊரடங்கு; பொதுமக்கள் வெளியே வந்துடாதீங்க!
இந்தியாவின் மொத்த கொரோனா வைரஸ் பாதிப்புகளில் இரண்டாம் இடத்தில் இருந்தாலும், தினசரி தொற்றில் கேரள மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. கடந்த ஒருவாரமாக சுமார் 30 ஆயிரத்தை நெருங்கி நோய்த்தொற்று பதிவாகி வருகின்றது. நேற்றைய தினம் புதிதாக 29,836 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
75 பேர் பலியாகி இருக்கின்றனர். 22,088 பேர் குணமடைந்துள்ளனர்.
நாட்டிலேயே அதிகபட்சமாக 2,12,596 கொரோனா நோயாளிகளுக்கு கேரளா சிகிச்சை அளித்து வருகிறது. கொரோனா முதல் அலையை திறம்பட கையாண்ட நிலையில், கேரள மாடல், சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா டீச்சர் உள்ளிட்டவை தேசிய அளவில் பேசுபொருளானது. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு மீண்டும் பொறுப்பேற்றது.
ஆனால் யாரும் எதிர்பார்க்காத
வகையில் அமைச்சரவையில் இருந்து ஷைலஜா டீச்சர் நீக்கப்பட்டு, சுகாதாரத்துறை அமைச்சராக வீணா ஜார்ஜ் நியமிக்கப்பட்டார். இந்த சூழலில் இரண்டாவது அலையை கையாள முடியாமல் கேரளா தத்தளித்து வருவது அம்மாநில அரசின் மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துள்ளது. இதற்கிடையில் கொரோனா பாசிடிவ் விகிதம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் இரவுநேர ஊரடங்கை அமல்படுத்துமாறு கேரள அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருந்தது.
இதன் தொடர்ச்சியாக அவசர ஆலோசனை கூட்டத்திற்கு முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு
விடுத்திருந்தார். அதில், சுகாதாரத்துறை அமைச்சர், துறை சார்ந்த அதிகாரிகள், வல்லுநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 30) முதல் இரவுநேர ஊரடங்கை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்.
No comments:
Post a Comment