கனடா செல்லும் இந்தியர்களுக்கு சிக்கல்; ஏதாச்சும் பண்ணுங்க மத்திய அரசே! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, August 21, 2021

கனடா செல்லும் இந்தியர்களுக்கு சிக்கல்; ஏதாச்சும் பண்ணுங்க மத்திய அரசே!

 கனடா செல்லும் இந்தியர்களுக்கு சிக்கல்; ஏதாச்சும் பண்ணுங்க மத்திய அரசே!

உலகின் பல்வேறு நாடுகளில் பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால், வெளிநாட்டு பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பின்னர் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் இந்தியாவில் இருந்து வருவோருக்கு கட்டுப்பாடுகளை தளர்த்தியது.

நேரடி விமானங்கள் தடை

ஆனால் கனடா அரசு மட்டும் இந்தியாவில் இருந்து வரும் நேரடி விமானங்களுக்கு செப்டம்பர் 21ஆம் தேதி வரை தடையை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி மூன்றாவது நாடுகளில் இருந்து கொரோனா பரிசோதனை செய்து நெகடிவ் என கிடைக்கப் பெற்ற சான்றும் கட்டாயம் தேவை என்று கூறியுள்ளது. இதனால் இந்தியர்கள் நேரடியாக கனடாவிற்கு செல்ல முடியாமல் வேறு நாடுகள் வழியாக செல்லும் நிலை காணப்படுகிறது.
நெகடிவ் சான்று அவசியம்

இதன் காரணமாக பணம், நேரம் விரயம் ஆவதுடன் RT-PCR பரிசோதனைக்காக மிகுந்த அலைச்சலுக்கு ஆளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் கல்வி, வேலை சார்ந்து கனடாவிற்கு செல்லும் இந்தியர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதுதொடர்பாக கனடா பல்கலைக்கழகத்தில் படித்து வரும் இந்திய மாணவி லரைனா குமார் கூறுகையில், கனடா அரசின் கடும் விதிமுறைகளால் கடும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்திய அரசுக்கு கோரிக்கை

இந்தியாவில் இருந்து துபாய் சென்று, அங்கிருந்து ஸ்பெயின், மெக்சிகோ செல்ல வேண்டியுள்ளது. அதன்பின்னரே கனடா செல்லும் நிலை இருக்கிறது. இதனால் 1.5 லட்ச ரூபாய் செலவாகும் கனடா பயணத்திற்கு 5 லட்ச ரூபாய்க்கும் மேல் செலவாகிறது. மேலும் வெளிநாட்டில் இரண்டு நாட்கள் தங்கி RT-PCR கொரோனா பரிசோதனை செய்து நெகடிவ் சான்று பெற வேண்டும்.

இதற்காக நிறைய அலைய வேண்டியுள்ளது. எனவே இந்த விஷயத்தில் இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கனடா அரசுடன் பேசி கட்டுப்பாடுகளை தளர்த்துவது அல்லது அலைச்சல் இல்லாத மாற்று வழிகளையோ ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad