அரசு இழந்த ரூ 25 கோடியை மீட்டுக் கொடுத்த அமைச்சர் சேகர்பாபு: திருப்பூரில் பாராட்டு மழை!
கோவில்கள் மற்றும் வருவாய்த் துறை நிலங்கள் அதிக அளவில் தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இரண்டு நாட்களில் ரூ.25 கோடி மதிப்பிலான 2.67 ஏக்கர் நிலங்களை அரசு அலுவலர்கள் அதிரடியாக மீட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு விசுவேசுவர சாமி- விசாலாட்சி அம்மன் திருக்கோயிலுக்குச் சொந்தமான 1.68 ஏக்கர் நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவர் கடந்த 20 ஆண்டுகளாக ஆக்கிரமித்து வைத்திருந்துள்ளார்.
இதனையடுத்து கோவை இணை ஆணையர் மூலம் 2019இல் தொடரப்பட்ட இந்த நிலம் சார்ந்த வழக்கில், அறநிலையத்துறைக்குச்
சொந்தமான இடம் என நீதிமன்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதனடிப்படையில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் நேற்று திருப்பூர்-காங்கயம் ரோட்டில் நல்லி கவுண்டன் நகர்ப் பகுதியில் உள்ள ரூ 15 கோடி மதிப்பிலான 1. 68 ஏக்கர் நிலத்தை அதிரடியாக மீட்டனர்.
இதேபோல்,திருப்பூர் மாவட்ட வருவாய்த் துறைக்குச் சொந்தமான சுமார் 1 ஏக்கர் நிலம் நல்லூர் அருகே உள்ள சென்னிமலை பாளையத்தில்,தனிநபர் ஒருவரால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது .சென்னிமலைப்பாளையத்தில் உள்ள வஞ்சியம்மன் கோவில் எதிரே சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவுள்ள ரூ.10 கோடி மதிப்பிலான இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்ததுள்ளது.
இதனையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில், மாவட்ட வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி தலைமையிலான வருவாய்த்துறை அலுவலர்கள் நேரில் சென்று ஆக்கிரமிப்பிலிருந்த நிலத்தை மீட்டனர்.
மேலும் நிலத்தில் வருவாய்த் துறைக்குச் சொந்தமான இடம் என்ற அறிவிப்புப் பலகை ஒன்றை வைத்தனர்.
இரண்டு நாட்களில் அரசுத் துறைகளுக்குச் சொந்தமான ரூ 25 கோடி மதிப்பிலான நிலங்கள் அதிரடியாக மீட்கப்பட்டுள்ள சம்பவம், திருப்பூரில் உள்ள நில ஆக்கிரமிப்பாளர்களைக் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
No comments:
Post a Comment