அங்காடி தெரு: நாற்காலி கிடைத்தது, வாழ்வும் கிடைக்குமா? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, September 14, 2021

அங்காடி தெரு: நாற்காலி கிடைத்தது, வாழ்வும் கிடைக்குமா?

அங்காடி தெரு: நாற்காலி கிடைத்தது, வாழ்வும் கிடைக்குமா?

மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் பல வரவேற்பைப் பெற்றுவருகின்றன. அவற்றில் ஒன்று, வணிக நிறுவனங்களில் நீண்ட நேரம் நின்றுகொண்டே பணிபுரியும் ஊழியர்களுக்கு, வெரிகோஸ் உள்ளிட்ட பல உபாதைகள் ஏற்படுவதைத் தடுக்கும் பொருட்டு அவர்களுக்கு இருக்கை வசதி அளிக்க வேண்டும் என்பது.

சில நாட்களுக்கு முன், தமிழ்நாடு தொழிலாளர் நலன், திறன் மேம்பாடு அமைச்சர் சி. வே. கணேசன், சட்டமன்றத்தில் இது குறித்து ஒரு மசோதாவை கொண்டு வந்தார். அதில், ‘தமிழ்நாட்டில், பெரிய ஜவுளிக் கடைகள் உள்ளிட்ட பெரும்பாலான கடைகளில் பணிபுரியும் ஆண், பெண் பணியாளர்கள், வேலை நேரம் முழுவதும் நின்றபடியே பணி புரிந்து வருகின்றனர். இதனால், பல்வேறு உடல் நல உபாதைகளுக்கு ஆளாகின்றனர். அவர்களுக்கு, உட்கார இருக்கை வசதி வழங்க வேண்டும். இதையடுத்து, 1947ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

நிறுவனம் என்கிற அடிப்படையில் இல்லாமல், சங்க அமைப்பிலும் இல்லாமல் பணிபுரிவர்கள், உதிரித் தொழிலாளர்கள். இவர்களது நீண்ட நாள் கோரிக்கையில் இதுவும் ஒன்று. இப்படி, கடைகளில் நீண்ட நேரம் நின்றுகொண்டே பணிபுரிபவர்கள் வெரிகோஸ் என்கிற நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

வெரிகோஸ் என்றால் என்ன?

மருத்துவர் மோகன்தாஸ், “அதிக நேரம் நின்று கொண்டே வேலை செய்வதால் ஏற்படும் 'வெரிகோஸ்' நோய், 'விரி சுருள் சிரை நோய்' எனப்படுகிறது. நம் உடலின் அனைத்து பாகங்களில் இருந்தும், இதயத்திற்கு எடுத்து செல்லும் இரத்த குழாய்களில், வெளிப்புற சிரைகள், உட்புற சிரைகள் என இரு வகை உண்டு. அதில் வெளிப்புற சிரையில் இருந்து ரத்தத்தை உட்புற சிரை வழியாக இதயத்துக்கு எடுத்து செல்ல உதவுவதே இந்த நாளத்தின் பிரதான பணியாகும். இது தனது பணியை சரிவர செய்ய இயலாத போது, இரத்தம் இதயத்திற்கு செல்ல முடியாமல் கால்களில் வீக்கம், அரிப்பு, நரம்பு சுருளுதல், அரிப்பால் வரும் புண்கள் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது.

ஜவுளி உள்ளிட்ட கடைகளில் பெருமாபாலும் பெண்கள் பணிபுரிகிறார்கள். அவர்களுக்கு மாதவிடாய், இடுப்பு வலி போன்ற பிரச்னைகள் ஏராளம் உண்டு. ஆகவே கூடுதலான உடல் பிரச்சினைகளை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்” என்கிறார்.

இந்தத் தொழிலாளர்களின் பிரச்சினையை மிக யதார்த்தமாகப் பல ஆண்டுகளுக்கு முன்பே திரைப்படமாக்கியவர் இயக்குநர் வசந்தபாலன். தமிழ்நாடு அரசின் தற்போதைய நடவடிக்கையை வரவேற்கும் இவர், “அரசின் இந்த நடவடிக்கையை கைகூப்பி வரவேற்கிறேன். அதே நேரம் வருத்தமான விஷயம் ஒன்றும் இருக்கிறது. ஊழியர்களுக்கு நாற்காலி அளியுங்கள், குடிக்க நீர் கொடுங்கள் என்பதையெல்லாம் சட்டம்போட்டு சொல்ல வேண்டியிருக்கிறது. சம்பந்தப்பட்டவர்களுக்கு இதெல்லாம் தானாகவே புரியாதா?” என்கிற கேள்வியை எழுப்புகிறார்.

நமது நாட்டில் காலில் செருப்பு அணிவதற்கு போராட்டம், தெருவில் நடப்பதற்கு போராட்டம், பெண்கள் மாராப்பு அணிவதற்கு போராட்டம் என்பதுதான் கடந்த கால சோக வரலாறு! மிகச் சமீபத்தில்தான், ‘கடை ஊழியர்கள் அமர நாற்காலி வேண்டும்’ என்கிற போராட்டம், கேரளாவில் நடந்தது. இதற்கான கலகக்குரலை முதன் முதல் எழுப்பியர், மாயாதேவி என்ற தொழிலாளி.

இவர், ‘பணி இடத்தில் உட்கார நாற்காலி வேண்டும், கழிப்பறை இடைவேளைகள் வேண்டும்’ என போராட்டத்தைத் துவங்கியபோது, கேரள வணிகர் சங்கமும், கடை உரிமையாளர்களும், கேலி செய்தனர். ‘நாற்காலி வேண்டும், கழிப்பறைகளைப் பயன்படுத்தவும் வேண்டும் என்றால் பெண்கள் வீட்டிலேயே இருக்கட்டுமே!’ என்றும் பேசினர். இவர்கள் மட்டுமல்ல, தொழிற்சங்கங்கள்கூட இந்தக் கோரிக்கையைச் செவிமெடுக்கவில்லை.

இந்த நிலையில், ‘பெண்கூட்டு’ என்ற பெண்கள் அமைப்பின் தலைவர் விஜி என்பவருடன் இணைந்து மாயாதேவி போராட ஆரம்பித்தார் (இந்த ‘பெண்கூட்டு’ அமைப்பு 2010ஆம் ஆண்டே பெண்களுக்குப் போதிய கழிப்பறைகள் வேண்டும் என்று போராட்டம் நடத்தியிருக்கிறது).

இவர்களது போராட்டத்துக்குப் பிறகு, கேரள மாநில அரசு 2018 த ஏப்ரல் மாதம், ‘கேரள கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கான’ சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. ‘பெண்கள், வேலை நேரங்களில் அமர்வதற்கு இருக்கை அளிக்க வேண்டும்’ என்பதோடு, ‘போதிய இடைவெளிகளில் ஓய்வு எடுக்கவும், பணியிடத்தில், பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை அளிக்க வேண்டும்’ என்பதும் இந்தத் திருத்தத்தில் கொண்டுவரப்பட்டது.

சட்டம் நடைமுறைக்கு வருமா?

தமிழ்நாடு அரசின் தற்போதைய நடவடிக்கையை தொழிலாளர்கள் வரவேற்கிறார்கள். தங்களது பெயரை வெளிப்படுத்த விரும்பாத, சென்னை தி.நகர் பகுதியில் பெரும் நிறுவனத்தில் பணிபுரியும் சிலர், “அரசின் தற்போதைய நடவடிக்கை அவசியமான ஒன்று. குடும்ப வறுமை காரணமாக, இது போன்ற கடைகளுக்கு பணிக்கு வருகிறோம். வேறு வழியில்லை. வெகு நேரம் நின்றுகொண்டே பணியாற்றுவதால் உடல் நல பாதிப்பு ஏற்பட்ட பலரை நேரடியாக பார்த்திருக்கிறோம். நாளை நமக்கும் இதே கதிதான் என்பது தெரிந்தாலும் வேறு வழியில்லை.

ஆனால் அரசின் உத்தரவை, நிறுவனங்கள் நடைமுறைக்குக் கொண்டு வருமா என்பது பெரும் கேள்வி. ஏற்கெனவே, குழந்தைத் தொழிலாளர்கள் கூடாது என சட்டம் இருக்கிறது. ஆனால் அந்தத்துறை அதிகாரிகள் வரும்போது மட்டும், குழந்ததைத் தொழிலாளர்களை ஒளித்துவைத்துவிட்டு, தொடர்ந்து வேலை வாங்கும் நிறுவனங்கள் உண்டு. ஆகவே, சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதையும் அரசு கண்காணிக்க வேண்டும்!” என்றனர்.

இது குறித்து சி.ஐ.டி.யு. மாநில பொதுச் செயலாளர் சுகுமாரன், “உண்மைதான். அரசின் சட்டங்கள் பல அறிவிப்புகளாக மட்டுமே இருக்கின்றன. கடைகளில் பணிபுரியும் உதிரித் தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணியிக்கப்படுவதில்லை. பெரும்பாலும் இவர்கள், தென் மாவட்டத்தில் வறுமையான குடும்பங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறார்கள். இவர்களது பெற்றோருக்கு குறிப்பிட்டத் தொகையைக் கொடுத்து, வேலைக்கு அழைத்து சேர்க்கிறார்கள். இவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம்கூட நிர்ணயிக்கப்படுவதில்லை. தவிர,வேலை நேரம், 12,16 மணி என இருக்கிறது. பெண்கள் பணியாற்றக் கூடிய இடத்தில் கழிவறை வசதி இல்லை. தவிர மதியம் சாப்பிட அளிக்கப்படும் குறுகிய நேரத்தில் கழிவறை சென்று வர வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். இந்த ஊழியர்களுக்கு சட்டப் பாதுகாப்பு இல்லை அதாவது பி.எப்., இ.எஸ்.ஐ, இல்லை” என்று அவர்களுடைய பிரச்சினையைப் பட்டியலிடுகிறார்.

‘இரவு நேரங்களில் பணியில் ஒரே ஒரு பெண் மட்டும் பணியாற்றக்கூடாது; இரவு பத்து மணிக்கு மேல், வந்து செல்ல வேண்டியிருந்தால் போக்குவரத்து வசதி இருக்க வேண்டும்’ என்பது கேரளாவில் நடைமுறையில் இருக்கிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலான நிறுவனங்களில் இது கடைபிடிக்கப்படுவது இல்லை.

உதிரித் தொழிலாளர்களுக்கு என்று நல வாரியம் இருக்கிறது. ஆனால் இது பெரும்பாலான உதிரித் தொழிலாளர்களுக்கு தெரியாது. தெரிந்தவர்களும், வாரியத்தில் சேர முடியாத நிலை. ஏனென்றால் இதற்கான நடைமுறைகளுக்காக வாரிய அலுவலகம் சென்று வர, விடுப்புகிடைப்பதில்லை. ஆகவே, அதிகாரிகள், உதிரித் தொழிலாளிகளைத் தேடிச் சென்று வாரியத்தில் சேர்க்க வேண்டும். அப்படிச் சேர்ந்தாலாவது அறுபது வயதுக்குப் பிறகு ஆயிரம் ரூபாய் பென்ஷன் கிடைக்கும், ஆனால், கடைகளில் பணிபுரியும் பெண்கள் பலர், நாற்பது வயதில் உடல் நலிவு ஏற்பட்டு, வேலையை விட்டு நிற்கும் நிலையும் ஏற்படுகிறது. ஆகவே இவர்களது பென்சனுக்கான வயதை குறைக்க வேண்டும் என்று சுகுமாரன் கோரிக்கை விடுக்கிறார்.

No comments:

Post a Comment

Post Top Ad