ஊர்க்காவல் படையினர் ஊதியம்: அண்ணாமலையின் வழக்கை முடித்து வைத்த ஐகோர்ட்..!
ஊர்க்காவல் படையினருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.152 வீதம் மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ.2,800 ஊதியமாக வழங்கப்பட்டு வந்தது. பொதுவாகவே ஊர்க்காவல்படையில் பணியாற்றும் இளைஞர்கள் காவல்துறைக்கு இணையாக பணி செய்ய வேண்டியிருக்கும். ஆனால், அவர்களுக்கு அளிக்கப்படும் ஊதியம் மிகவும் குறைவு என்பதால் அவர்களால் குடும்பச் செலவுகளை சமாளிக்க முடியாத சூழல் நிலவி வந்தது.
ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று ஊர்க்காவல் படையினர் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவர்களின் ஊதியத்தை நாள் ஒன்றுக்கு ரூ.560 ஆக உயர்த்தி ஆணையிட்டது. ஆனால், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை 2017 ஆம் ஆண்டில் நாள் ஒன்றுக்கு ரூ.560 ஆக உயர்த்திய தமிழக அரசு, அவர்களின் அதிகாரபூர்வ பணி நாட்களின் எண்ணிக்கையை 25-லிருந்து ஐந்து நாட்களாக குறைத்துவிட்டது. மேலும், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஊர்க்காவல் படையினருக்கு ரூ.18,000 வரை மாத ஊதியம் வழங்கப்படுகிறது கவனிக்கத்தக்கது. இந்நிலையில், கடந்த 2019 இல் ஊர்க்காவல் படையினரின் பணி நாட்களை 10 நாட்களாக அதிகரித்து உள்துறை அரசாணை வெளியிட்டது.
அந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், 4 மணி நேரம் வரை பணியில் இருப்பவர்களுக்கு 280 ரூபாய் மட்டுமே ஊதியம் வழங்கப்படும் என்றும், 4 முதல் 8 மணி நேரம் வரை பணியில் இருந்தால் மட்டுமே 560 ரூபாய் வழங்கப்படும் என்றும் அரசாணையில் கூறப்பட்டிருந்ததை அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ''உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ஊர்க்காவல் படையினரை பணிவரன் முறைப்படுத்த முடியாது என்றும், தாமாக முன்வந்து சேவை செய்பவர்களுக்கு கவுரவம் அளிக்கும் வகையில் ஊதியம் வழங்கப்படும்'' என்று விளக்கம் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், ஊர்க்காவல் படையினருக்கு 10 நாட்கள் அதிகாரபூர்வ பணி இருந்தாலும் சிலர் மாதம் முழுவதும் பணிக்கு வரும் நிலை உள்ளது. இந்த நிலையை முறைப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். மேலும், மாதம் 5600 ரூபாய் வழங்கும் வகையில் அவர்களுக்கு பணி வழங்க வேண்டும் என்றும் அவர்களது ஊதியத்தை தமிழக அரசு உயர்த்தும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் கருத்து தெரிவித்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.
No comments:
Post a Comment