தமிழகத்தில் புதிதாக ஒரு லட்சம் மின் இணைப்பு: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, September 23, 2021

தமிழகத்தில் புதிதாக ஒரு லட்சம் மின் இணைப்பு: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பு!

தமிழகத்தில் புதிதாக ஒரு லட்சம் மின் இணைப்பு: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பு!

சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு மின்சார வாரியம், மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம், மின் தொடரமைப்புக் கழகம் ஆகியவற்றின் சார்பில் விவசாயிகளுக்கு ஒரு இலட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து, 10 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகளுக்கான ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

எரிசக்தி துறையின் 2021–2022 ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையில் மாநிலத்தின் விவசாய உற்பத்தியினை பெருக்கி, விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் நோக்குடன் ஒரு இலட்சம் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக இதுவரையிலும் இல்லாத அதிகபட்ச அளவாக இந்த ஆண்டு ஒரு இலட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்க முடிவெடுக்கப்பட்டு, முதல்வர் ஸ்டாலினால் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் ரூ.3,025 கோடியில் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின். சில திட்டங்கள் அந்த நேரத்துக்கு தேவையானதாக இருக்கும். சில திட்டங்கள் சில ஆண்டுகளுக்குத் தேவையானதாக இருக்கும். சில திட்டங்கள்தான் தலைமுறை தலைமுறைக்கு பயனுள்ளதாக இருக்கும். அந்த வரிசையில் தலைமுறை தலைமுறைக்கு பயனுள்ளதான திட்டம்தான், இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும் அவர் பேசுகையில், “ஒரு லட்சம் மின் இணைப்புகள் வழங்கும் இந்த திட்டத்தின் மூலமாக குறிப்பாக, உழவர்கள் பயன்பெறுவதால், தங்களுக்கு மட்டுமல்ல, இந்த மாநிலத்து மக்களுக்கே உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து தரப் போகிறார்கள். அத்தகைய மகத்தான திட்டம்தான் இந்த திட்டம். பத்தாண்டுகாலத்தில் சுமார் 2 லட்சம் இணைப்புகள்தான் அ.தி.மு.க. ஆட்சியில் தரப்பட்டன. ஆனால் நாம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த நான்கு மாத காலத்தில் ஒரு லட்சம் இணைப்புகளை நாம் கொடுக்கப் போகிறோம். இன்னும் பெருமையாக சொல்ல வேண்டும் என்றால், இதைவிட வேகமான ஆட்சி இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது” என்றார்.

உழவு உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்ற ஒரே ஒரு நோக்கத்துடன் ஒரு லட்சம் உழவர்களுக்கு புதிய மின் இணைப்பு ஆணையை இன்று வழங்கி இருக்கிறோம். மின்சாரம் தயாரிப்பு என்பதே மிகப்பெரிய செலவு வைக்கும் திட்டமாக இருக்கிறது. அதனால் முடிந்தளவு சிக்கனமாக மின்சாரத்தை பயன்படுத்துங்கள். இன்றைக்கு புதிய இணைப்பு பெற்றவர்கள், மின்சாரத்தை தேவைக்கு மட்டும் பயன்படுத்துங்கள் என்றும் முதல்வர் ஸ்டாலின் அப்போது கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment

Post Top Ad