பேருந்துகளில் முட்டிமோதும் மாணவர்கள், கலங்கவைக்கும் கொரோனா! பள்ளிகள் திறப்புக்கு செக்?
தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாம் அலை கட்டுக்குள் வந்த நிலையில் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்க முடிவு செய்யப்பட்டு , செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. அதன்படி, 9 10 11 12 ஆகிய வகுப்பு மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். கொரோனா பரவலுக்கு மத்தியில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் பள்ளிகளில் கொரோனா தடுப்பு நெறிமுறைகளை ஏற்கனவே அரசு வெளியிட்டிருந்தது.
வகுப்பறையில் சமூக இடைவெளி, ஆசிரியர்கள், பணியாளர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திருக்க வேண்டும்,
தினமும் வகுப்பறைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் உள்ளிட்ட நெறிமுறைகளை அந்தந்த பள்ளிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இதற்கு மத்தியில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ''தமிழகத்தில் 9-12 வகுப்பு வரை பயிலும் 35 லட்சம் மாணவர்களில் 28 இலட்சம் பேர் பள்ளிகளுக்கு வருகை தருகின்றனர் என்றும் அதில் இதுவரை 148 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
இந்த செய்தி பெற்றோருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ள நிலையில் பள்ளிகளுக்கு அரசு பேருந்தில் சென்று வரும் மாணவர்கள் ஆபத்தான நிலையில் படியில் தொங்கிக்கொண்டு பயணிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. சாதாரண நாட்களில் அரசு பேருந்தில் நெரிசலுடன் பயணிப்பதை போல மாணவர்கள் முகக்கவசங்களை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு பேருந்துகளில்
முட்டிமோதும் காட்சிகளை தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் காணமுடிகிறது.
50 சதவீத பயணிகளுடன் அரசு பேருந்துகள் கணிசமான அளவில் இயக்கப்படும் என்று அரசு அறிவித்தது வெறும் அறிவிப்பாகவே மாறிவிட்டது. பள்ளிகளை திறக்கும் முன்பு வரை பேருந்துகளிலும், பேருந்து நிறுத்தங்களிலும் ஓரளவு சரீர இடைவெளியை பின்பற்றிய மக்கள் இப்போது கடுகு அளவும் பின்பற்ற முடியாத நிலையில் கூட்ட நெரிசலுடன் அன்றாடம் பயணித்து வருகின்றனர்.
இதுகுறித்து வேதனை படும் பெற்றோர்களும், மாணவர்களும் அரசு கூடுதல் பேருந்துகளை இயக்கினால் இப்படியான நிலைமை ஏற்படாது என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும், போக்குவரத்து துறை இதை கவனிக்காமல் இப்படியே விட்டுவிட்டால் பேருந்து பயணத்தின்போது கொரோனா தொற்று பரவும் என்றும் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்துக்கொள்ளும் சூழல் ஏற்படும் என்றும் கூறுகின்றனர்.
No comments:
Post a Comment