மாணவர்களுக்கு அடுத்தடுத்து காய்ச்சல்: மூடப்படும் பள்ளிகள்?
தமிழகத்தில் மூடப்பட்டிருந்த பள்ளிகள் கடந்த 1ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளன. ஆரம்ப, நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்குவது தொடர்பாக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே, பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் மன சோர்வில் இருந்து விடுபட்டிருந்தாலும், பள்ளிகளுக்கு சென்ற மாணவர்கள், ஆசிரியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதனால், மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளை
மூட வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்து வருகின்றன.
காய்ச்சல், வாந்தி, பேதி, இருமல், உடல் வலி, சோர்வு உள்ளிட்ட கொரோனா தொற்று அறிகுறிகள் தெரிந்தால், மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என்றும், தனியார் பள்ளிகள் மாணவர்களை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மாறாந்தையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு அடுத்தடுத்து காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளியில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை சுமார் 450 மாணவர்கள் பயில்வதாக கூறப்படுகிறது. அரசின் அறிவிப்புக்கு பிறகு பள்ளி திறக்கப்பட்ட நிலையில், 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் 22 பேருக்கு நேற்று ஒரே நாளில் காய்ச்சல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தகவலறிந்து வந்த சுகாதாரத் துறையினர் நேரில் சென்று மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனையில் ஈடுபட்டனர். பரிசோதனையின் முடிவு இன்னும் வராத நிலையில் இன்று மேலும் 30 மாணவர்களுக்கு தொடர் காய்ச்சல் ஏற்பட்டதால் பதற்றம் நிலவி வருகிறது. இதைத் தொடர்ந்து,
அந்த மாணவ - மாணவிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றாக இருக்கக்கூடுமோ என்ற அச்சம் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதாபோல், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து, மாணவர்களின் நலன் கருதி ஆரம்ப, நடுநிலை பள்ளிகளை தற்போதைக்கு திறக்க வேண்டாம் என்றும், ஏற்கனவே திறக்கப்பட்ட பள்ளிகளை மூட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன.
No comments:
Post a Comment