கல்லூரிகளுக்கு ’கட்’ அடிக்கும் மாணவர்கள்; தமிழக அரசு போட்ட பலே திட்டம்!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. அதேசமயம் தினசரி 50 சதவீத மாணவர்களை மட்டும் அனுமதிக்கும் வகையில், சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் கல்லூரிகள் திறக்கப்பட்டதில் இருந்து மாணவர்கள் வருகை பெரிதும் குறைவாகவே காணப்படுவதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
உயர் கல்வித்துறை பெரும் கவலை
இந்த விஷயம் தற்போது தமிழக அரசின் கவனத்திற்கு சென்றுள்ளது. அதாவது, மாணவர்கள் தங்கள் குடும்பத்திற்கு உதவி செய்யும் வகையில் விவசாய நிலங்களிலும், வேறு சில வேலைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதன்மூலம் சிறிய அளவில் வருவாய் ஈட்டுவதில் ஆர்வம் காட்டி வருவதாக சொல்லப்படுகிறது.
மாணவர்கள் வருகை குறைவு உயர் கல்வித்துறையை பெரும் கவலைக்கு ஆளாக்கியிருக்கிறது.
தொண்டு நிறுவனம் சார்பில் ஆய்வு
எனவே இதன் பின்னணி குறித்து விரிவான அறிவியல் ரீதியிலான முறையில் தகவல்களை சேகரிக்க திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஐ.ஏ.என்.எஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய சென்னையை சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்றின் தலைவர் சுதீந்தரன் கிருஷ்ணன், கடந்த ஒன்றாம் தேதி மாநிலம் முழுவதும் கல்லூரிகள் திறக்கப்பட்டதில் இருந்து தற்போது வரை ஒரு சிறிய ஆய்வு மேற்கொண்டோம்.
விரிவான அறிக்கை தயாரிக்க ஏற்பாடு
அதில், வழக்கமாக கல்லூரிகளுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவை சந்தித்திருப்பது தெரியவந்தது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களின் கல்லூரிகளில் ஒரு வகுப்பிற்கு குறைந்தது 15 முதல் 20 சதவீத மாணவர்கள் வருவதில்லை. அதுவும் கிராமப்புறங்களில் நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. இந்த விஷயத்தில் உயர்
கல்வித்துறை ஆய்வு செய்து அறிவியல் ரீதியிலான அறிக்கையை தயார் செய்ய வேண்டும்.
மாணவர்களை மீண்டும் கல்லூரிகளுக்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த சூழலில் அனைத்து மாவட்டங்களிலும் உயர் கல்வித்துறை சார்பில் ஒரே நேரத்தில் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த சில நாட்களில் ஆய்வு முடிவுகள் தொடர்பான தேதி குறித்து இறுதி செய்யப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment