நான் ஏன் குடிக்கிறேன்?
குடிப் பழக்கத்தால் குடல் வெந்து மரணம், மது போதையால் சாலையில் ஆடையவிழ்ந்து அவமானம், குடிவெறியில் குற்றச்செயல்… இப்படியான தகவல்கள் மிகச் சாதாரணமாகிவிட்டன. சமூகத்தில் புகழ்பெற்றவர்கள் முதல் நெருக்கமாகப் பழகியவர்கள் வரையில் பலரும் கண்ணாடிக் கோப்பைகளிலும் பிளாஸ்டிக் குவளைகளிலும் கதை முடிந்தவர்களாக மறைந்து போயிருக்கிறார்கள். மக்களுக்குப் பிடித்தமான திரைப்படக் கலைஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், முன்னணிக்கு வந்திருக்க வேண்டிய தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் – இப்படி எத்தனையோ பேரை மது வெள்ளம் மூழ்கடித்திருக்கிறது. சமுதாய முன்னேற்றத்திற்கு துணையாகியிருக்கக்கூடி அறிஞர்கள்,
ஆய்வாளர்கள், திறமையாளர்கள், உழைப்பாளிகள் என ஏராளமானோரின் பங்களிப்பை நாடு இழந்திருக்கிறது.
அண்மையில்கூட, அன்பர்களின் பரவலான நேசத்தைப் பெற்ற கவிஞரின் மறைவுச் செய்தியை விட, மது அமிலத்தால் அவரது குடல் சரிப்படுத்த முடியாத அளவுக்குக் குதறப்பட்டுவிட்டது என்ற தகவலே பலரையும் கலங்கவைத்தது. குடிக் கிறக்கத்தோடு வண்டியோட்டிச் சென்ற பல இளைஞர்களைச் சாலை விபத்துகளில் குடும்பங்கள் பறிகொடுத்துக் கதறியிருக்கின்றன. அந்த வீடுகளின் துக்கத்தில் பங்கேற்க வந்திருக்கிற நண்பர்களிடம் பெரியவர்கள், “டேய் உங்களாலதான் இவனுக்கு இப்படி ஆச்சு. நீங்களாவது குடிக்காம இருங்கடா,” என்று ஆற்றாமையோடு சொல்வதைக் கேட்கலாம். காவல்துறை விசாரணை உட்பட இறுதிச் சடங்குகள் முடிந்தபின் அந்த நண்பர்கள் தங்களுடைய வழக்கமான இடத்திற்குப் போய் பாட்டில்களைத் திறப்பார்கள். கேட்டால், நண்பனை இழந்த துக்கத்தை மறப்பதற்காக என்பார்கள்.
இளைஞர்களின் மதுப் பழக்கம்
இந்தியாவில், 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களிடையே கிட்டத்தட்ட 88 சதவீதம் பேர் மதுவை வாங்குகிறவர்களாக அல்லது குடிக்கிறவர்களாக இருக்கிறார்கள் என்ற ஒரு பகீர்த் தகவலைத் தெரிவிக்கிறது ஓர் ஆய்வு. 2016ஆம் ஆண்டில் 538 கோடி லிட்டர் மது நுகரப்பட்டது. ஒவ்வோர் ஆண்டாக
இது அதிகரித்துக்கொண்டே வந்து, 2020ஆம் ஆண்டில் 653 கோடி லிட்டர் குடித்து அழிக்கப்பட்டிருக்கிறது என்று, புள்ளிவிவர சேகரிப்பு அமைப்பான ஸ்டேட்டிஸ்டா இந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. இந்த 653 லிட்டரில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்தியச் சாராயம் (ஐஎம்ஐஎல்), இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டுச் சாராயம் (ஐஎம்எஃப்எல்) இரண்டு வகையறாவும் உண்டு. கள்ளச்சாராயம் இந்தக் கணக்கில் வருகிறதா என்று தெரியவில்லை.
“குடியைத் தடுக்க வேண்டிய அரசாங்கம் மதுக்கடைகளுக்கு உரிமம் அளித்து வருவாய் ஈட்டுவது சரிதானா? அரசாங்கமே மதுக்கடை நடத்துவது முறைதானா?” இப்படியான வினாக்கள் நியாய விமர்சனத்தோடு வருகின்றன. “உயிரையே பறிக்கும் விஷச் சாராயத்தையும் பல ஆபத்தான கலவைப்பொருள்களோடு சேர்த்து விழுங்கவைக்கிற கள்ளச் சாராயத்தையும் தடுக்க இதுவே வழியாக இருக்கிறது. கடந்த காலத்திலும் இன்றைக்கும் ஒன்றிய அரசின் நிதிக் கொள்கை மாநிலக் கருவூலத்திற்குப் பற்றாக்குறையை ஏற்படுத்துவதாக இல்லாமலிருந்தால் அதை ஈடுகட்ட இப்படியொரு மாற்று வழி தேவைப்படாமலே போயிருக்கும்.” இப்படியான விளக்கங்களும் நியாய வாதத்தோடு வருகின்றன.
இவையெல்லாம் அரசின் கொள்கை, நிதி இருப்பு மட்டுமல்லாமல் பொதுச் சமூகத்தில் குடி ஏதோவொரு வகையில் ஏற்கப்பட்டதாக இருப்பதையும் சார்ந்திருக்கின்றன. அதே வேளையில், குடியை நாடுகிற, விடாமல் தொடர்கிற, குடிக்காமலிருக்க முடியாது என்கிற அளவுக்கு அதன் பிடியில் தன்னை ஒப்படைத்துக்கொள்கிற தனி மனித மனநிலை பற்றிப் பேச வேண்டியிருக்கிறது.
எப்போதெல்லாம் குடிக்கிறார்கள்?
alcoholic 1
கே. பாலச்சந்தர் இயக்கிய ஒரு திரைப்படத்தில்,
வி.எஸ். ராகவன் குடியில் விழுந்தவராக நடித்திருப்பார். “மனசுக்குக் கஷ்டமா இருந்தா குடிக்கிறேன், மனசு சந்தோஷமா இருந்தா குடிப்பேன்….” என்று, குடித்துக்கொண்டே இருப்பதற்கான காரணங்களை அவர் அடுக்குவார். குடியின் மடியில் தலை புதைக்கிறவர்கள் குடியை நிறுத்த மாட்டார்கள், அதை நிறுத்தாமல் தொடர்வதற்கான காரணங்களை மட்டும் காட்டிக்கொண்டே இருப்பார்கள், தேவைப்பட்டால் புதிய காரணங்களையும் தேடிப்பிடிப்பார்கள். என்று தெரியவரும்.
ஏதோவொரு கட்டத்தில், குறிப்பாக இளமைப் பருவத்தில் நண்பர்கள் அல்லது சொந்தக்காரர்கள் உடனிருப்போடும், ஒருவர்க்கொருவர் தூண்டிவிடுவதோடும், “அடிக்ட் ஆகுறதுதான் தப்பு, லிமிட்டா இருந்தா ஒரு பிரச்சினையும் இல்லை” என்ற ஊக்கச் சொற்களால் தயக்கங்கள் உடைபடுகின்றன. இதுவல்லாமல், வீட்டிலேயே தகப்பனோ, வேறொரு பெரியவனோ குடித்துவிட்டு வருவதையும், குடும்பத்தில் அது அனுமதிக்கப்படுவதையும் பார்த்துத் தாங்களும் அதைத் தழுவ முடிவு செய்கிறார்கள். குடித்துவிட்டுத் தெருவில் ரகளை செய்கிறவர்களைக் கண்டு மற்றவர்கள் ஒதுங்குவதைப் பார்த்து அதுவொரு நாயகத்தனம் போல என்று கருதித் தானும் அவ்வாறே நடந்துகொள்கிறவர்கள்… இப்படியாகப் பழக்கம் தொற்குகிறது. கண்களின் முன்பாகக் காட்சிகள் கனவுபோல் கலக்கமாகத் தெரிவதையும், உடலே இலேசாகி மிதப்பது போன்ற ஒரு மிதப்பு தோன்றுவதையும் அனுபவிக்கிற தொடக்க நாட்களின் பரவசம் தொடர்ந்து அதை நாடுகிறபோது போதைப்பழக்கமாக மாறுகிறது. அது இல்லாமல் வாழவே முடியாது என்ற நிலைக்குப் பலரை அடிமைப்படுத்துகிறது. ஆண்களானால், மீசை முளைப்பதிலும், சிகரெட்டை உதடுகளில் பற்றிக்கொண்டு புகை விடுவதிலும் ஆணெனும் பெருமிதம் நிறுவப்படுவதாக நினைத்துக்கொள்வது போல இதிலேயும் பெண்ணைக் கவர்கிற ஒரு வேதிச்செயல் இருப்பதான கற்பனை சேர்ந்துகொள்கிறது. ஒப்பீட்டளவில் ஆண்களை விட மிகக் குறைவான பெண்களே குடிக்கிறார்கள் என்றாலும், அவர்களுடைய தொடக்கம் என்பதும் அந்தப் பரவச உணர்வைப் பெறுவதாகவும், ஆணுக்குச் சமானமாக அனுபவிக்கிற உரிமையாகவும் நண்பர்களின் கூட்டில் ஒரு துறுதுறுப்பாகவும் அமைகிறது. அவர்களிலும் ஒரு பகுதியினர் குடிக்கு அடிமையாகிறார்கள். இவை போன்று, குடிக்குள் குடிபுகுவதற்குக் கதவைத் திறந்துவிடுகிற வேறு பல சூழல்களும் இருக்கக்கூடும்.
இப்படிப்பட்டவர்களுக்குத், தாங்க முடியாததாக ஏற்படக்கூடிய ஒரு சோகமும் கூட, அந்தப் பொழுதில் பாட்டிலைத் திறப்பதற்கான ஒரு சாக்காகிவிடுகிறது. அதிலேயே ஊறிப்போய்விடுவதால், அந்தச் சாக்குகளை உண்மையென்று அவர்களே நம்புகிற போக்கும் ஏற்பட்டுவிடுகிறது.
தொழிலில் ஏமாற்றிவிட்டார்கள், கடினமாகப் படித்தும் தேர்ச்சியடையவில்லை, உலக சினிமாவையே புரட்டிப்போடுகிற கதை தன்னிடம் இருந்தும் ஏற்கப்படவில்லை, தனது அறிவார்ந்த வாதங்களை யாரும் மதித்துக் கேட்கவில்லை… என்று காரணங்கள் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். நல்ல வாய்ப்புகள் அழைக்கிறபோது, போதையோடு போய் நின்று அந்த வாய்ப்புகளை இழந்தவர்கள் உண்டு.
திறமைசாலியான ஒருவருக்கு நண்பர்களின் பரிந்துரையால் நல்லதொரு வேலை கிடைத்தது. அந்த நிறுவனத்திடமிருந்து முறைப்படி அவருடன் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார்கள். அப்போது அவர் போட்டிருந்த சரக்கின் நெடி தொலைபேசியிலேயே மூக்கைத் துளைத்திருக்கிறது. மறுபடி அழைப்பார்களா என்ன? “சரியான வேலை கிடைக்க மாட்டேனென்கிறது, என் திறமைக்கு ஏற்ற சம்பளம் தர மறுக்கிறார்கள். அதனாலதான் குடிக்கிறேன்…” என்று இப்போதும் சொல்லிக்கொண்டிருக்கிறார்.
முன்னணியில் பத்துக் காரணங்கள்
alcoholic 2
“நான் காலையிலே குடிக்கிறதில்லை,” “நான் தினமும் குடிப்பதில்லை,” “நான் வேலைக்குப் போகிறேனே,” “குடி மறப்பு சிகிச்சை எடுத்துக்கொள்ள நேரமே இல்லை,” “என் நண்பர்கள் எல்லோரும் குடிக்கிறார்கள்,” “என்னுடைய பணிச்சூழலால் ஏற்படும் மன அழுத்தத்திற்கு இதுதான் மருந்து,” “இது எனது (உடல்/மன) வலியை மறக்க உதவுகிறது,” “இது இல்லாமல் எனக்குத் தூக்கம் வராது,” “நான் மட்டமான ஸ்பிரிட் சரக்குகளைக் குடிப்பதில்லை,” “நான் எப்போது நினைத்தாலும் நிறுத்திவிடுவேன், விரும்பும்போது மட்டும் மறுபடியும் கொஞ்சம் குடிப்பேன்,” – இவையெல்லாம் குடியாளர்கள் சொல்கிற சாக்குகளில் முதல் பத்து இடங்களில் இருப்பவை என்று ‘லைஃப் ஒர்க்ஸ்’ என்ற அமைப்பு பட்டியிலிட்டிருக்கிறது. குடியைக் கைவிடுவதற்கு ஆலோசனைகள் கூறி வழிகாட்டுகிற அமைப்பு இது. “நான் குடிப்பதுண்டு, ஆனால் ஒருநாளும் கைக்காசைச் செலவழிப்பதில்லை. ஏதாவது ஃபங்ஷனில் பரிமாறப்பட்டால் குடிப்பேன், கூட வருகிறவர்களின் செலவில்தான் குடிப்பேன்,” “நான் போதையில் விழவைக்கிற விஸ்கி, பிராந்தியைத் தொடுவதில்லை, பீர் மட்டும்தான் சாப்பிடுவேன்,” என்ற விளக்கங்கள் சொல்வோர், இந்தப் பத்து போக மீதியுள்ள காரணங்களுக்குள் வரக்கூடும்.
குடிப்பழக்கம் மண்ணின் மரபிலேயே இருக்கிறது, நட்பாக இருந்த மன்னர்களும் புலவர்களும் சேர்ந்து மது அருந்திய காட்சிகள் இலக்கியத்தில் இருக்கின்றன. உடலுக்கும் உள்ளத்திற்கும் மறு ஊக்கமளிக்கிற அளவுக்கு இதைத் தொட்டுக்கொள்வதில் தவறில்லை என்று வரலாற்றுச் சான்றுகளை முன்வைக்கிறவர்களும் உண்டு. அவர்களும் ஒரு ரசனை மட்டத்திலான பழக்கமாக வரலாறைத் துணைக்கு அழைத்துக்கொள்கிறார்களேயன்றி போதையில் மூழ்கிப் பொறுப்பற்றவர்களாகிப் போவதை ஆதரிப்பதில்லை. வீட்டில் தரமான மது வைத்திருந்து, இரவு உணவின்போது குடும்பமாகச் சேர்ந்து அளவோடு எடுத்துக்கொண்டு பேசிவிட்டுப் படுக்கைக்குச் செல்கிறவர்கள் இருக்கிறார்கள்.
கல்லூரிக் காலத்தில், ஒரு நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுப்பதற்காக எங்களின் ஆங்கில ஆசிரியரைச் சந்திக்கச் சென்றபோது கேக், முறுக்குகளைப் பரிமாறிவிட்டு அவர் “எங்கள் வீட்டிலேயே தயார் செய்தது” என்று சொல்லி ஒரு அழகான சிறிய கண்ணாடிக் கோப்பையில் ஒயின் கொடுத்தார். “இது பற்றி சமூகம் அரைகுறைப் புரிதலுடன் ஏற்படுத்தியிருக்கிற குற்றவுணர்வு தேவையில்லை,” என்று அவருடைய தமக்கை எங்களிடம் பேசினார். உடன் வந்தவன் முழுதாகக் கோப்பையைக் காலி செய்ய, எனது தயக்கத்தைப் பார்த்துவிட்டு, கோப்பையை முக்கால்வாசி காலி செய்து, “அந்த கேக்கைத் தொட்டுச் சாப்பிடுங்கள். பிடிக்கவில்லை என்றால் விட்டுவிடுங்கள்,” என்றார்கள். வெளியே வந்த பிறகு, கேக்கில் ஊறி நாக்கைத் தொட்டுக் குடலுக்குச் சென்ற சில சொட்டு ஒயின், ஒரு மந்தகாசமான உணர்வைத் தருகிறதோ என்று நினைத்தேன். ஆனால் அப்போது வெயில் ஓய்ந்து மாலைப்பொழுதின் மஞ்சள் வெளிச்சமும் குளுமையும் சூழ்ந்திருந்ததே அதற்குக் காரணம் என்று பின்னர் கண்டுபிடித்தேன். நண்பர்களின் உற்சாகத் தூண்டலில் அவ்வப்போது ருசி பார்க்கத் தொடங்கி, பின்னொரு கட்டத்தில் சட்டென ஒரேயடியாக அதை ஒதுக்கித்தள்ள முடிந்த அனுபவம் இது பற்றிப் பேசுகிற தகுதியைக் கொடுத்தது!
பலர் நீண்டநேர இடையறாத பணிக்குவியலிலிருந்து விடுபட்டு வீடு திரும்பி, குடும்பத்தினரோடு அன்பாக அளவளாவிய பிறகு அளவாக “ஒரே ஒரு பெக்” எடுத்துக்கொண்டு அமைதியாகக் கட்டிலில் மல்லாக்கச் சாய்ந்துவிடுவார்கள். உண்மையிலேயே அந்த பெக் அவர்கள் உறங்குவதற்கு உதவுகிறதா அல்லது வேறு எதிர்காலத் தொந்தரவுகளுக்குத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறதா?
இவர்கள் உள்ளிட்ட விதிவிலக்கான சிலரைத் தவிர, ஆகப்பெரும்பாலான நிறைக்குடியர்கள், தங்களது குடும்பத்திற்கோ மற்றவர்களுக்கோ ஏற்படும் அவமதிப்புகளைப் பொருட்படுத்தாத தன்னலமிகளாகவே இருக்கிறார்கள். போதை முற்றிப்போய் மருத்துவர்களே கைவிடும் நிலையில் இத்தகையவர்களின் நிலைமை வெறுப்பைத் தாண்டிப் பரிதாபத்துக்கு உரியதாகிவிடுகிறது. ஒரு கட்டத்தில், உடலின் நோவும், குடலின் ஓயாத பேரிரைச்சலுமாக செத்துப்போனால் நல்லது என்ற முடிவுக்கே வருகிறார்கள். சாவை அழைக்கும் ஏற்பாடாகவும் தொடர்ந்து குடிக்கிறார்கள். குடும்பத்தினரும் நண்பர்களும்கூட “இவனுக்குச் சாவு வந்தால் நல்லதுதான்,” என்று வேதனையோடு கருதுகிற நிலைமையும் ஏற்படுவதுண்டு.
நிதானம் தவறாதவர்கள்
alcohol
ஒன்றைக் கவனிக்க முடியும், அரிதாக ஓரிரு நிகழ்வுகளைத் தவிர்த்து, குடியர்கள் பலரும் முற்றிலுமாக நிதானம் இழப்பதில்லை. நடைமேடையில் வேண்டுமானால் கிடப்பார்களே அல்லாமல், வேகமாக வண்டிகள் ஓடிக்கொண்டிருக்கிற சாலையில் படுப்பதில்லை. போகிற வருகிற வண்டியோட்டிகளை அச்சுறுத்தி மகிழ்கிறவர்கள் அந்த வண்டிகளில் அடிபடுவதில்லை. “ஃபுல்லாக” ஏற்றிக்கொண்டு ரயில் நிலையம் வருகிறவர்கள் சரியாகத் தங்களது பெட்டியைப் பார்த்து ஏறத் தவறுவதில்லை. வீட்டு முன்னால் ஓடுகிற சாக்கடையில் உருண்டிருப்பார்களேயல்லாமல் கழிவுநீரில் மூழ்குவதில்லை. மனைவியை அடிப்பதற்கு தனது நிதானமற்ற நிலையைத் துணைக்கு அழைத்துக்கொள்ளத் தயங்குவதில்லை. அட, குடித்துவிட்டு ஆடி ஆடி நடந்து போகும்போது, எதிரில் வருகிற காவலருக்கு ஒரு சல்யூட் வைக்கவோ, அல்லது நல்ல பிள்ளையாய் மாறி ஆட்டமின்றி ஒதுங்கி நடக்கவோ மறப்பதில்லை.
கால் நூற்றாண்டுக்கு முன், மதுரையில் வசித்த நாட்களில் நகரப் பேருந்தில் பார்த்த ஓர் அனுபவம் இங்கே நினைவுகூரத்தக்கது. இரண்டு பேர் “நல்ல” போதையோடு ஏறினார்கள். ஒரு இருக்கையில் அமர்ந்தார்கள். ஆபாசத்தின் எல்லைக்கே சென்று வாயாடினார்கள். பெண்கள் புகார் செய்ததைத் தொடர்ந்து அவர்களிடம் சென்ற நடத்துநர் வாயை அடக்கி நிதானமாக இருக்குமாறு கோபமாகக் கூறினார். பேருந்திலேயே சிலர், “அவங்யதான் குடிபோதையிலே இருக்காங்யல்ல… அவங்யளுக்கு என்னா தெரியும்,” என்று பேசினார்கள். இந்த ஆதரவுக் குரலைக் கேட்டதும் அந்த இருவரும் பல மடங்கு வக்கிரமான சொற்களைக் கொட்டினார்கள்.
அப்போது அவர்களின் முன்பாக வந்து நின்றார் உயரமான, கட்டுக்கோப்பான உடல்வாகு கொண்ட ஒருவர். “வாயை மூடுறீங்களா இல்லையா,” என்று ஓங்கிய குரலில், ஒரு கைவிரலை நீட்டிய நிலையிலும், இன்னொரு கையை ஓங்கிய நிலையிலும் வைத்துக்கொண்டு உரக்கக் கேட்டார் அவர். இப்படி அவர் கேட்டது சாலையில் கடந்துகொண்டிருந்த மற்ற பேருந்துகளில் சென்றவர்களுக்கே கூடக் கேட்டிருக்கும்! தலையை உயர்த்தி அவர் முகத்தைப் பார்த்த அந்த இருவரும் அப்படியே அமைதியானார்கள். அவர்களுடைய நிறுத்தம் வந்ததும் இயல்பாக இறங்கிப் போனார்கள். அவர்களுடைய போதையை அல்ல, போதையில் இருந்தால் எப்படியும் பேசலாம் என்ற மமதையை இறக்கிவிட்டவர், பின்னாளில் மதுரைத் தொகுதி மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் பி.மோகன்.
எத்தனை பேருந்துகள் ஓடுகின்றன, எத்தனை போதை வக்கிரர்கள் சூழலை அருவருப்பாக்கிக்கொண்டிருக்கிறார்கள்…. எத்தனை மோகன்கள் தேவைப்படுகிறார்கள்? திருடராய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று பாட்டெழுதினார் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். குடியை ஒழிக்கக் குடியராய்ப் பார்த்துத் திருந்துவது முக்கியத் தேவை.
No comments:
Post a Comment