விஜய் அப்பா சொன்னது தப்பா?
கூடியவரை எந்தச் சர்ச்சைக்கும் போகாமல் ஒதுங்கியிருப்பவர் நடிகர் விஜய். ஆனால், அவருடைய அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் அவ்வபோது எதையாவது கொளுத்திப்போட்டு விஜய்யைச் சர்ச்சையில் இழுத்துவிடுவார். தந்தை தந்தை மகற்காற்றும் இந்த ‘உதவி’யால் இப்போது முக்கியமான விஷயம் ஒன்று பேசுபொருளாகியிருக்கிறது. சான்றிதழில் சாதிப் பெயரைக் குறிப்பிடுவது தொடர்பான விவாதம்தான் அது.
ஆண்டனி சாமி இயக்கத்தில், விஜய் விஷ்வா, ஷைனி நடிக்கும் ‘சாயம்’ படத்தில் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த ஆடியோ வெளியீட்டு நிகழ்வில் நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகரும் கலந்துகொண்டார்.
அவர் பேசும்போது, “மாணவர்களிடையே சாதி வெறியைப் புகுத்துவதால்
ஏற்படும் சமூகச் சீர்கேடு குறித்து இந்த ‘சாயம்’ திரைப்படம் பேசுகிறது. இது அவசியமான ஒன்று. அதே நேரம், சாதியை எதிர்த்து நாம் பிராக்டிகலாக என்ன செய்கிறோம் என்பதையும் யோசிக்க வேண்டும்.
எனது மகன் விஜய்யைப் பள்ளியில் சேர்க்கும்போது, ‘சாதி மதம்’ என்ற இடத்தில், ‘தமிழன்’ என்றே பதிய வேண்டும் என கூறினேன். இதற்குப் பள்ளி நிர்வாகத்தினர் முதலில் ஒப்புக்கொள்ளவில்லை. நான், ‘அப்படிப் பதியவில்லை என்றால், போராட்டம் நடத்துவேன்’ என எச்சரித்த பிறகு, பள்ளி நிர்வாகத்தினர் ஒப்புக்கொண்டனர். இப்போதும், விஜய் சான்றிதழில், ‘சாதி மதம்’ என்ற இடத்தில், ‘தமிழன்’ என்றே உள்ளது!” என்று உணர்ச்சிகரமாகப் பேசினார்.
கூட்டத்தில் இருந்த பலரும் வியந்து கைதட்டினர்.
வாய்ப்பே இல்லை ராசா!
sneha
‘சாதி, மதம் இல்லை’ சான்றிதழைப் பெற்ற சினேகா
ஆனால், “அப்படி நடக்க வாய்ப்பே இல்லை!” என்கிறார்கள், விபரம் தெரிந்தவர்கள்.
மு.கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியின் போது, 1973ஆம் ஆண்டு, தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை, “சான்றிதழ்களில் சாதி, மதத்தை குறிப்பிட பெற்றோர் விரும்பாவிட்டால், அதை ஏற்று சாதி மதம் இல்லை எனப் பதிய வேண்டும்” என உத்தரவிட்டது.
ஆனால் இது குறித்துப் பெற்றோர் அறிந்திருக்கவில்லை. ஆகவே, 2000ஆம் ஆண்டு ஜூலை 31, இதே விஷயத்தை
மீண்டும் அரசு வெளியிட்டது. அப்போதும் பெரும்பாலான மக்களுக்கு இது குறித்து தெரியவில்லை. ஏன், அரசு அதிகாரிகளுக்கே தெரியவில்லை.
யாராவது, தங்கள் பிள்ளைகளுக்கு, சாதி மதம் இல்லை என்று சான்றிதழ் கேட்டால் பள்ளியிலோ, தாசில்தார் அலுவலகத்திலோ மறுத்துவிடுவார்கள். அப்படி ஓர் வழக்கமே இல்லை என்பார்கள்.
இதற்கு முக்கிய சாட்சி, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்நேகா. இவர், 2019இல் ‘சாதி, மதம் இல்லை’ என்ற சான்றிதழைப் பெற்றார். அப்போது அவர், “பத்து வருடங்களாகப் போராடி இந்தியாவில் முதன் முறையாக, ‘சாதி மதம் இல்லை’ என சான்றிதழ் பெற்றிருக்கிறேன்” எனக் குறிப்பிட்டது முக்கியமானது.
caste certificate
தவிர, ‘சாதி மதம்’ என்கிற இடத்தில், ‘தமிழன்’ என்றோ வேறு மொழி சார்ந்தவராகவோ, இன்றுவரை பதிய முடியாது என்பதே யதார்த்தம்.
ஆக, எஸ்.ஏ.சி. கூறியது நடந்திருக்க வாய்ப்பில்லை.
இதில் இன்னொரு கேள்வியும் இருக்கிறது: ‘சாதி மதம் இல்லை’ என்று சான்றிதழ் பெற்றால் சாதி ஒழிந்துவிடுமா?
நிச்சயம் அதற்கு வாய்ப்பு இல்லை.
காரணம், சாதி என்பதும் அதன் பொருட்டான ஏற்றத்தாழ்வு என்பதும், சமுதாயத்தில் இருக்கிறது. நீண்ட காலமாக, சாதியை முன்னிட்டு இருந்த ஏற்றத் தாழ்வை அந்த சாதியின் அடிப்படையில் உரிமை அளித்து சரி செய்யவே, இட ஒதுக்கீடு என்கிற முறை ஏற்பட்டது. அதற்காகத்தான் சாதி சான்றிதழ் தேவைப்படுகிறது.
சாதி – சாதி ஏற்றத்தாழ்வு என்பது நோய் என்றால், சாதிச் சான்றிதழ் என்பது அந்த நோயை போக்கும் மருந்து.
மருந்தை வீசி எறிந்துவிட்டால் நோயைப் போக்கிவிடலாம் என்பது எப்படி சரியாகும்?
சான்றிதழில் (மட்டும்) சாதி ஒழிப்பு
தவிர சிலர், “நான் பிற்படுத்தப்பட்ட / ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன். தற்போது நல்ல வசதியாக இருக்கிறேன். அதனால், எனது பிள்ளைகளுக்கு, ‘சாதி இல்லை’ என்று சான்றிதழ் பெறப்போகிறேன்” என்கிறார்கள்.
முதல் விஷயம், சாதிச் சான்றிதழ் என்பது சமூக நீதியான இட ஒதுக்கீடுக்காகத்தானே தவிர, பொருளாதார அடிப்படையிலானது அல்ல.
ஒரு வாதத்துக்காக இவர்கள் சொல்வதை ஏற்றுக்கொண்டாலும், இன்று இவர் வசதியாக இருக்கிறார், நாளை வசதிக் குறைவு ஏற்பட்டால் மீண்டும் சாதிச் சான்றிதழ் பெற்று இட ஒதுக்கீடு பெற முடியுமா?
முடியாது. ‘சாதி மதம் இல்லை’ எனச் சான்றிதழ் பெற்றவர்கள், முற்பட்ட வகுப்பினர், அதாவது ‘அதர் கேஸ்ட்’ என்பதில் சேர்க்கப்படுவார்கள். அவர்களுக்கு இட ஒதுக்கீடு உரிமை கிடைக்காது.
தவிர, ஒருவர் தனக்குச் சாதிச் சான்றிதழ் தேவையில்லை என்றால் அவர்தான் முடிவெடுக்க வேண்டும். பெற்ற பிள்ளையாகவே இருந்தாலும், அடுத்தவர் குறித்து இவர் எப்படித் தீர்மானிக்க முடியும்? பிள்ளைகள் வளர்ந்து சிந்தித்து, அவர்களாக விரும்பினால் அப்படிச் செய்யலாம்.
சாதி, மதம் கடந்தவன் என்பதை நிரூபிக்க விரும்பினால், ஒருவர் தான் விண்ணப்பிக்கும் கல்வி, வேலை வாய்ப்புகளுக்குச் சாதிச் சான்றிதழை இணைக்காமல் விட்டாலே போதும். பெரிய விஷயம் இல்லை.
வேண்டுமானால் ஒன்று செய்யலாம். சாதிச் சான்றிதழ்களில் குறிப்பிட்ட சாதி, மதம் என்பதைக் குறிக்காமல், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியல் இனத்தவர் என்று மட்டும் பதியலாம். இதில் முறைகேடு நடக்காமல் கண்காணிப்பது அவசியம்.
இப்போது மீண்டும் விஜய் விவகாரத்துக்கு வருவோம்.
கடந்த வருடம் எஸ்.ஏ.சந்திரசேகர், ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் கட்சி ஒன்றைப் பதிவு செய்யத் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்தார். கட்சியின் தலைவராக பத்மனாபன் என்பவரையும், பொதுச் செயலாளராகத் தன்னையும், பொருளாளராக தனது மனைவி ஷோபாவையும் விண்ணப்பத்தில் குறிப்பிட்டார்.
இந்தத் தகவல் வெளியான உடனேயே, நடிகர் விஜய், தனது தந்தையின் நடவடிக்கைக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என அறிக்கை வெளியிட்டார். எஸ்.ஏ.சந்திரசேகர், “ஆமாம்… இதற்கும் விஜய்க்கும் சம்பந்தமில்லை. நான் கட்சியைப் பதிவு செய்யும் பணியில் பிசியாக இருக்கிறேன். பிறகு விளக்கமாகப் பேசுகிறேன்” என்று சமாளித்தார்.
இதைத் தொடர்ந்து ஷோபா சந்திரசேகர், “எனது கணவர் எஸ்.ஏ.சி., ஏதோ சங்கம் துவங்கப்போவதாக ஒரு விண்ணப்பத்தைக் காட்டி எனது கையழுத்து வாங்கினார். பிறகு ஒரு விண்ணப்பத்திலும் கையெழுத்து கேட்டார். அப்போதுதான் அது கட்சியைப் பதிவு செய்யும் விண்ணப்பம் என்பதை அறிந்தேன். ‘விஜய்க்குத் தெரியாமல் கட்சியைப் பதிவு செய்வது தவறு’ எனக் கூறிக் கையெழுத்திட மறுத்துவிட்டேன். நீண்ட நாட்களாகவே, ‘அரசியல் குறித்துப் பேசாதீர்கள்’ என விஜய் சொல்லியும், எஸ்.ஏ.சி. கேட்கவில்லை. அதனால் அவருடன் பேசுவதையே விஜய் நிறுத்திவிட்டார்” என்றார் ஷோபா.
இதையடுத்து, “கட்சி துவங்க நான் அளித்த விண்ணப்பத்தைப் பரிசீலிக்க வேண்டாம்” எனத் தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பினார் எஸ்.ஏ.சி. ஒருவழியாகத் தந்தை அளித்த சங்கடத்திலிருந்து அப்போது மீண்டார் விஜய்.
இப்போது அடுத்த சங்கடம். அதாவது, “விஜய் சான்றிதழில் சாதி மதம் என்ற இடத்தில் தமிழன் என்று இருக்கிறதா? அந்த சான்றிதழைக் காண்பியுங்கள்” என்று பலரும் கேட்கக்கூடும்.
எஸ்.ஏ.சி. ஏதாவது சொல்லிச் சமாளித்துவிடுவார். விஜய்தான் பாவம்!
No comments:
Post a Comment