"நீட்" ரத்து என்பது தி.மு.க., அரசின் பொய்யான வாக்குறுதி: அ.தி.மு.க., கண்டனம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, September 13, 2021

"நீட்" ரத்து என்பது தி.மு.க., அரசின் பொய்யான வாக்குறுதி: அ.தி.மு.க., கண்டனம்!

"நீட்" ரத்து என்பது தி.மு.க., அரசின் பொய்யான வாக்குறுதி: அ.தி.மு.க., கண்டனம்!

தி.மு.க., அரசின் பொய்யான வாக்குறுதியை நம்பி, நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் ஏமாற்றப்பட்ட சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த உயிரிழந்த மாணவர் தனுஷ் குடும்பத்திற்கு அ.தி.மு.க., சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:

சேலம் மாவட்டம், மேட்டூர் சட்டமன்றத் தொகுதி, கூழையுரைச் சேர்ந்த "விவசாயி சிவக்குமார் என்பவரது இரண்டாவது மகன் தனுஷ் என்பவர் தி.மு.க.,வின் பொய்யான தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான நீட் தேர்வுக்கு விலக்கு என்பதை நம்பி, மேல்நிலைத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றும், இந்த அரசால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற இயலாத அரசாக உள்ளதை நாள்தோறும் எண்ணி மனம் நொந்து, வாழ்க்கையில் பல எல்லைகளைக் கடந்து, சாதித்து, இந்த நாட்டிற்காகவும், தமிழக மக்களுக்காகவும் மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு வாழ்ந்த மாணவன் தனுஷ், தன்னுடைய இன்னுயிரை மாய்த்துக் கொண்டார்.

தனுஷின் மரணத்திற்கு, தி.மு.க.,வும், அதன் அரசும் தான் முழுப் பொறுப்பேற்க வேண்டும். தனுஷின் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியும், அவரது குடும்பத்திற்கு அவர் இருந்து ஆற்ற வேண்டிய பணிக்கு ஒப்பாக தகுதியுடைய ஒருவருக்கு அரசு வேலை வழங்கியும் , அவர் தம் குடும்பம் எவ்வித சிரமமும் இன்றி எதிர்காலத்தைக் கடக்க வழிவகை செய்ய வேண்டும்.

இந்த துயரமான சம்பவத்தைக் கருத்தில் கொண்டு அனைவரையும் தன் கண் எனக் காக்கும் "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மறைந்த தனுஷின் மரணத்திற்கு எதைக் கொடுத்தாலும் ஈடு செய்ய முடியாது என்ற எண்ணம் எங்களுக்கு இருந்தபோதிலும், அவர்தம் குடும்பத் துயரத்தில் பங்குபெற வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு சிறிய உதவியாக , அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

எந்த துயரம் வந்தாலும் வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு போராடி, தடைகளைத் தாண்டி அம்மாவின் வழியிலே பீடுநடை போட்டு வெற்றி பெற வேண்டும் என்கின்ற போராட்ட குணத்தை மாணவச் செல்வங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.


மாறாக பெற்றோர்களுக்கு காலமெல்லாம் மறக்கவே முடியாத துயரத்தை மாணவச் செல்வங்கள் வழங்கி விடக்கூடாது என்பதை அறிவுரையாக கூறி, தன் இன்னுயிரை நீத்த அன்புசெல்வம் தனுஷின் மறைவிற்கு கழகத்தின் சார்பில் எங்களது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டு, எல்லாம் வல்ல இறைவன் அவர் தம் குடும்ப உறுப்பினர்களுக்கு மன உறுதியையும் வலிமையையும் தரவேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad