குற்றச் செயல்களில் ஈடுபடும் குழந்தைகள்: ராமதாஸ் அரசுக்கு கோரிக்கை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, September 28, 2021

குற்றச் செயல்களில் ஈடுபடும் குழந்தைகள்: ராமதாஸ் அரசுக்கு கோரிக்கை!

குற்றச் செயல்களில் ஈடுபடும் குழந்தைகள்: ராமதாஸ் அரசுக்கு கோரிக்கை!

பாமக நிறுவனர் ராமதாஸ், சிறுவர்கள் தவறான பாதையில் பயணிப்பதைத் தடுத்து முன்னேற்றப் பாதையில் பயணிப்பதை உறுதி செய்ய அரசும், சமுதாயமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் நிலை குறித்து தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. கொலை உள்ளிட்ட குற்றச்செயல்களில் சிறுவர்கள் ஈடுபடுவது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது என்பது தான் அந்த அதிர்ச்சி அளிக்கும் தகவல் ஆகும். இது அரசும், மக்களும் எளிதில் கடந்து செல்லக்கூடிய விஷயம் அல்ல.


தமிழ்நாட்டில் சிறுவர்கள் ஈடுபட்ட கொலைக்குற்றங்களின் எண்ணிக்கை கடந்த நான்காண்டுகளில் இரு மடங்குக்கும் கூடுதலாகியிருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 2016-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் மொத்தம் 1603 கொலைகள் நடந்துள்ளன. அவற்றில் 48 கொலைகளில் சிறுவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக் கூறி கைது செய்யப்பட்டனர். அடுத்த 4 ஆண்டுகளில் கொலைகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கவில்லை.

ஆனால், சிறுவர்கள் கொலைக்குற்றங்களில் ஈடுபடும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. 2020-ஆம் ஆண்டில் கொலைகளின் எண்ணிக்கை 3.61% மட்டுமே அதிகரித்து 1661 ஆகியுள்ள நிலையில், சிறுவர்கள் கொலைக்குற்றங்களில் ஈடுபடும் நிகழ்வுகள் 116.66% அதிகரித்து 104 ஆக உயர்ந்துள்ளன. சென்னை, திருச்சி, மதுரை, திருப்பூர், தூத்துக்குடி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தான் கொலைக்குற்றங்களில் சிறுவர்கள் ஈடுபடுவது அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவை மிகவும் கவலையளிக்கக்கூடியவை ஆகும்.

கொலைக்குற்றங்கள் மட்டுமின்றி பிற குற்றங்களிலும் சிறுவர்கள் ஈடுபடுவது பெருகி வருவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. 2020-ஆம் ஆண்டில் தேசிய அளவில் சிறுவர்கள் அதிக அளவில் குற்றச் செயல்களில் ஈடுபடும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு நான்காவது இடத்தைப் பிடித்திருப்பதாக குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. இளைஞர்கள் தான் நாட்டின் எதிர்காலம்; அவர்களைத் தான் இந்தியாவை வல்லரசாக்கக் கூடியவர்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். அனைத்திலும் சிறந்தவர்களாக வளர வேண்டிய அவர்கள், கொலை, திருட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களில் சிக்கி சீரழிவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர்களை நல்வழிப்படுத்துவதே நமது முதன்மைக் கடமையாகும்.



எந்தக் குழந்தையும் பிறக்கும் போது தீயவர்களாகவோ, குற்றச் செயல்களை செய்பவர்களாகவோ பிறப்பதில்லை. வான்மழை எவ்வளவு தூய்மையானதோ, அதே அளவுக்கு குழந்தைகளும் தூய்மையானவர்கள். ஆனால், ''நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல்ப தாகும் அறிவு'' என்ற வள்ளுவர் வாக்குக்கு இணங்க குழந்தைகளும், சிறுவர்களும் எந்த சூழலில் வாழ்கிறார்களோ, அந்த சூழலில் ஆதிக்கம் செலுத்துபவர்களைப் போலவே மாறி விடுகின்றனர். குற்றம் செய்வதையே தொழிலாகக் கொண்டவர்கள் சிறுவர்களை மூளைச்சலவை செய்து திருட்டு முதல் கொலை, கொள்ளை வரை அனைத்துக் குற்றங்களையும் செய்வதற்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். தொடக்கத்தில் குற்றங்களை செய்கிறோம் என்பது தெரியாமல் செய்யும் பல சிறுவர்கள், பின்னர் தொழில்முறை குற்றவாளிகளாக மாறி விடுகின்றனர்.

பதின்வயதில் குற்றங்களைக் குற்றம் என்று அறியாமலேயே அவற்றை செய்வது சாகசம் என்று நினைக்கும் சிறுவர்களின் மனநிலையை சமூக விரோதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வது, 18 வயதுக்கும் குறைவான சிறுவர்கள் செய்யும் குற்றங்களுக்கு தண்டனை குறைவு என்பதால், சமூகவிரோதிகள் சிறுவர்களைப் பயன்படுத்திக் கொள்வது, ஏழைச் சிறுவர்கள் செல்பேசி உள்ளிட்ட தங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் தவிக்கும் போது, அவற்றை வாங்கித் தருவதாக ஆசை காட்டி சிறுவர்களை குற்றச் செயல்களில் சிலர் ஈடுபடுத்துவது, மது, கஞ்சா உள்ளிட்ட அனைத்து வகையான போதைப் பொருட்களும் தடையின்றி கிடைப்பது போன்றவை தான் சிறுவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கு மிக முக்கியக் காரணமாகும். இந்த தீய வாய்ப்புகள் அனைத்தும் தடுக்கப்பட வேண்டும்.

No comments:

Post a Comment

Post Top Ad