கோயில்களில் அன்னதானம்: அமைச்சர் சேகர் பாபு வெளியிட்ட அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, September 19, 2021

கோயில்களில் அன்னதானம்: அமைச்சர் சேகர் பாபு வெளியிட்ட அறிவிப்பு!

கோயில்களில் அன்னதானம்: அமைச்சர் சேகர் பாபு வெளியிட்ட அறிவிப்பு!

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் 754 திருக்கோயில்களில், தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பழனி அருள்மிகு தண்டாயுதபாணிசுவாமி திருக்கோயில் மற்றும் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்களில் நாள் முழுதும் அன்னதானம் திட்டம் செயல்பாட்டில் இருந்து வருகிறது.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், திருத்தணி அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் ஆகிய மூன்று திருக்கோயில்களில் நாள் முழுதும் அன்னதானம் திட்டத்தினை முதல்வர் ஸ்டாலின் கடந்த 16ஆம் தேதி திறந்து வைத்தார். இத்திட்டம் பக்தர்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது.

அதேபோல், கொரோனா பெருந்தொற்று காரணமாக திருக்கோயில்களில் வழங்கப்படும் அன்னதானம் இலையில் பரிமாறப்படாமல் உணவுப்பொட்டலங்களாக அனைத்து நாட்களிலும் (வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு உட்பட) பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், அனைத்து அன்னதானம் வழங்கப்படும் திருக்கோயில்களில் வழக்கம்போல அன்னதானக்கூடங்களில் சமூக இடைவெளியுடன் பக்தர்களுக்கு இலையில் உணவு பரிமாறப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை அனைத்து அன்னதானம் வழங்கும் திருக்கோயில்களிலும் அன்னதானக்கூடங்களில் சமூக இடைவெளியுடன் பக்தர்களுக்கு அன்னதானம் இலையில் பரிமாறப்படும். வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் அன்னதானம் உணவுப்பொட்டலங்களாக பக்தர்களுக்கு தொடர்ந்து வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad