இனி ‘டாக்டர்’ அன்பில் மகேஷ்: படிக்க கிளம்பிய அமைச்சர்!
மு.க.ஸ்டாலின் முதன்முறையாக முதல்வராக பதவியேற்று நான்கு மாதங்கள் நிறைவடைந்துள்ளன. கொரோனா நெருக்கடி, காலியான கஜானா என பல்வேறு சவால்களுடன் பொறுப்புக்கு வந்த போதும் அதை வெற்றிகரமாக சமாளித்துள்ளனர்.
பெரியளவில் விமர்சனங்கள் ஏதும் எழாதததோடு பிற மாநிலங்களிலிருந்தும் கூட புதிய திமுக அரசுக்கு பாராட்டுகள் வந்துள்ளன. முதல்வர் மு.க.ஸ்டாலினோடு அவரது அமைச்சரவை சகாக்களும் பாராட்டப்படுகின்றன.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் செயல்பாடுகளும் ஆரம்பம் முதலே கவனம் ஈர்த்து வருகின்றன. பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், பொதுமுடக்க காலத்தில்
அரசுப் பள்ளிகளை நோக்கி வந்த லட்சக்கணக்கான மாணவர்களை தக்கவைக்க எடுக்கும் முயற்சி ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தவையாக பார்க்கப்படுகிறது.
43 வயதில் அமைச்சர் பொறுப்பை அலங்கரிக்கும் அன்பில் மகேஷ் எம்சிஏ பட்டதாரி. 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் சாப்ட்வேர் டெவலப்பராக பணியாற்றியுள்ளார்.
ஸ்டாலின் குடும்பத்துக்கும் இவரது குடும்பத்துக்குமிடையே மூன்று தலைமுறைகளாக நட்பு தொடர்கிறது. அன்பில் தர்மலிங்கமும் கலைஞர் கருணாநிதியும் நட்பு பாராட்டினர். அதன் பின் இருவரது மகன்களான அன்பில் பொய்யாமொழியும் மு.க.ஸ்டாலினும் நெருக்கமாக இருந்து வந்தனர். தற்போது இவர்களது மகன்களான அன்பில் மகேஷும் உதயநிதியும் நட்பு பாராட்டி வருகிறார்கள்.
உடற்கல்வி குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வரும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அது குறித்து பிஎச்டி ஆய்வு செய்கிறார். திருச்சி தேசிய கல்லூரியில் உடற்கல்வித் துறையில் ஆய்வுப்
படிப்பை தொடங்கியுள்ளார்.
இதற்கான முன்வடிவத்தை அன்பில் மகேஷ் பொய்யாமொழி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முன்னாள் துணைவேந்தர் மணிசங்கர், தேசிய கல்லூரி முதல்வர் சுந்தரராமன் ஆகியோரிடம் சமர்ப்பித்துள்ளார்.
ஆசிரியர் என்பவர் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்று சொல்வது போல பள்ளிக் கல்வித் துறைக்கு அமைச்சராக இருப்பவரும் கற்றுக் கொள்ள கல்லூரிக்கு கிளம்பியுள்ளது வரவேற்பு பெற்றுள்ளது.
No comments:
Post a Comment